கண்களும், காட்சிகளும்:
மரகத நாட்டின் மன்னர் தன்னுடைய மகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவள் சிறுவயது முதல் நல்ல அறிவும் பண்பும் உள்ளவளாக வளர்ந்ததோடு, விளையாட்டுத்தனமும் குறும்பும் நிறைந்தவளாகவும் இருந்தாள். தன்னுடைய விளையாட்டுத்தனத்தால் மற்றவர்களின் திறமைகளைக் கண்டுபிடிக்கும் இளவரசியின் இயல்பு அனைவருக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.
குறிப்பிட்ட வயதில் அவளுக்குத் திருமணம் செய்யலாம் என்று மன்னரும் இராணியும் முடிவுசெய்து அதை இளவரசியிடம் தெரிவித்தனர். அவளோ, தான் விரும்புவது போல் சுயம்வரத்தை நடத்துவதாக இருந்தால்தான் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வதாகக் கூறினாள். மேலும், இளவரசனின் அறிவு நுட்பத்தைத் தெரிந்துகொள்ளும் வகையில் சுயம்வரத்தில் போட்டி நடத்தவேண்டும் என்றும், அந்தப் போட்டியின் விவரங்கள் சுயம்வரம் நடக்கும் நாளில் தெரிவிப்பதாகவும் கூறினாள்.
இளவரசி கூறுவதில் மன்னருக்கும் இராணிக்கும் முழுமையான ஒப்புதல் இல்லாவிட்டாலும், மகளின் விருப்பத்திற்கு ஏற்ப மருமகனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நினைப்பினாலும், மகள் மீது இருந்த நம்பிக்கையினாலும் அவளுடைய விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.
எனவே, இளவரசியின் உருவப்படத்தையும், அவளுடைய தகுதிகளையும் மற்ற நாடுகளுக்கு அறிவிப்புச் செய்து, சுயம்வரமும் ஏற்பாடு செய்தார்கள். சுயம்வரம் நடத்துவதற்கு என்று குறிப்பிட்டிருந்த நாளில் வந்திருந்த ஏழு இளவரசர்களையும் தகுந்த மரியாதையுடன் வரவேற்று, விருந்தினர் மாளிகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்து உபசரித்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் சுயம்வரத்தின் போட்டியில் கலந்துகொள்ள அரண்மனை தோட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
இளவரசர்கள் அனைவரும் தோட்டத்திற்கு வந்தவுடன் போட்டியின் விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அதில், இந்தத் தோட்டத்தில் ஒளிந்துக்கொண்டிருக்கும் இளவரசியைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிப்பவரே போட்டியில் வென்றவர் ஆவார் என்றும், இந்தப் போட்டியில் வெல்லும் இளவரசரே சுயம்வரத்தில் வென்றவராக அறிவிக்கப்படுவார் என்றும், இளவரசியைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமையும் அவருக்கே உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட இளவரசர்கள் இதெல்லாம் ஒரு போட்டியா என்று நினைத்தபடி இலேசாக புன்னகை செய்தனர். பின்னர் அனைவரும் அந்தத் தோட்டத்தில் இருந்த அடர்ந்த செடிகள், புதர்களுக்கிடையில் புகுந்து தேடினார்கள். சிலர் மரத்தின் மீது ஏறி தேடிக்கொண்டிருந்தார்கள். ஒருசிலர் பெரிய பூந்தொட்டிகளின் உள்ளே ஒளிந்து இருக்கலாம் என்று நினைத்து அந்தத் தொட்டிகளைக் கவிழ்த்துப் பார்த்தார்கள். சிலர் தோட்டத்தில் இருந்த குளத்தில் இருக்கலாம் என்று அங்கு சென்று வேகமாகத் தேடினார்கள்.
அப்போது போட்டிக்கான நேரம் இன்னும் பத்து நிமிடங்கள் மட்டுமே உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அந்த அரண்மனை தோட்டத்தையே அலசியதுபோல ஒரு இடம் விடாமல் தேடிக் களைத்துப்போன இளவரசர்கள் இளவரசியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் சலிப்பும் கோபமுமாக ஓரிடத்தில் வந்து நின்றார்கள்.
அப்போது, அந்தப் போட்டியில் கலந்துகொண்டு அரண்மனை தோட்டம் முழுதும் இளவரசியைத் தேடிக் களைப்படைந்த பசும்பொன் நாட்டின் இளவரசன், சோர்வாக இருந்த மற்ற இளவரசர்களைக் கவனித்தான். அவர்களுள் ஒருவனைத் தன்வசம் திருப்பி, அவனுடைய தலைப்பாகையை எடுத்தான்.
ஏழு இளவரசர்களோடு, எட்டாவது ஆளாக தானும் சேர்ந்து, ஆண் வேடத்தில் ஒளிந்துகொண்டிருந்த இளவரசியைச் சரியாக ஊகித்துக் கண்டுபிடித்த இளவரசனை இளவரசி மகிழ்ச்சியோடு பார்த்தாள்.
எந்தப் போட்டியிலும் கடைசி நிமிடம் வரை வெற்றிக்கான வாய்ப்பு இருக்கும் என்ற இளவரசனின் நம்பிக்கையும், மாறுபட்டுச் சிந்திக்கும் திறனும், விழிப்போடும் சூழ்நிலையை அணுகும் நிதானமும், சரியான சமயத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்த இளவரசனின் துணிவும் இளவரசியின் மனதில் விருப்பத்தை ஏற்படுத்தின.
இருவரின் மனமும் இணைந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நாடு முழுவதும் தொடங்கிய திருமணக் கொண்டாட்டங்கள், இருநாடுகளின் கொண்டாட்டங்களாகச் சிறப்பாகத் தொடர்ந்தன.
# நன்றி.