பழக்கங்களும் பலன்களும்:
சிந்தனைகள், வார்த்தைகள், செயல்பாடுகள் என்று நம்மிலிருந்து வெளிப்படுகின்ற ஒவ்வொன்றும் நமக்குள் பழக்கங்களாக வளர்கின்றன. இத்தகைய பழக்கங்களின் பதிவுகள் நம்முடைய அணுகுமுறையிலும், நம்முடைய சூழலிலும் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வாழ்க்கையின் பலன்களாக விளைகின்றன.
இவ்வாறு நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியுள்ள இயல்பான பழக்கங்களைச் சற்றுக் கூர்ந்து கவனித்து, அவற்றை நம்முடைய நல்ல நோக்கத்திற்கு உறுதுணையாகச் செயல்படும் வகையில் சிறந்த அணுகுமுறைகளாக மேம்படுத்தும்போது அவை நம்முடைய வாழ்க்கையை மேலும் உயர்த்துகின்றன.
உதாரணமாக,
ஒரு மாணவர் நன்றாகப் படித்து எல்லா வினாக்களுக்கும் சரியான விடை தெரிந்தவராக இருந்தாலும், தேர்வு எழுதும்போது தெளிவான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இல்லாமல் அழகாக எழுதுவது நல்ல பழக்கம் எனப்படுகிறது.
இவ்வாறு அவர் அறிந்துகொண்டதை தேர்வில் முறையாக தெளிவாக வெளிப்படுத்துவதுதான் அவருடைய நோக்கத்திற்கு துணையாகச் செயல்படுகின்ற அணுகுமுறையாக உள்ளது. வேகமாக எழுதவேண்டிய தேர்வில் அவ்வாறு தெளிவாக எழுத வேண்டும் என்றால், தேர்வு இல்லாதபோதும், எப்போதும் அப்படியே தெளிவாக எழுதுகின்ற பயிற்சி அவசியம் வேண்டும்.
அதுபோலவே, முக்கியமான சந்திப்புகள், நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், சிறப்பு நிகழ்வுகள், விழாக்கள், கடினமான சூழல்கள் போன்ற குறிப்பிடத்தக்க சூழ்நிலைகளை முறையாகக் கையாளுவதற்கு தன்னம்பிக்கையான அணுகுமுறைகளே முதன்மையாக நின்று பலன்கள் தருகின்றன.
சுயமரியாதையை உயர்த்துகின்ற இத்தகைய நேர்மறையான அணுகுமுறைகள் நிரந்தரமான பழக்கமாக, ஒவ்வொரு நாளும் இயல்பாக வெளிப்படும் நிலையில் அவை நிச்சயமாக முன்னேற்றமான பலன்களைத் தருகின்றன. அதுபோலவே, தேவையற்ற பழக்கம் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கம் ஆகியவற்றை விடுவதும் முன்னேற்றத்திற்கு உதவுகின்ற பாதுகாப்பான முயற்சியாக செயல்படுகின்றது.
அவசியங்களும் அனுகூலங்களும்:
காட்டில் வாழ்கின்ற மான்கள், அவை இருக்கும் இடத்தில் வளர்ந்திருக்கும் புற்களையும் செடிகொடிகளையும் உண்டு கூட்டமாக வாழ்வதற்கு நிதானமாக நடந்து செல்லும் வாய்ப்பு மட்டுமே அவற்றிற்கு போதுமானது.
ஆனால், அந்தக் காட்டில் வேட்டையாடும் விலங்குகளும் உள்ள சூழலில், உணவு தேவைக்காக ஓடுகின்ற வேட்டை விலங்கைவிட உயிரின் தேவைக்காக ஓடுகின்ற மான்கள், கூடுதல் வேகத்தோடு ஓடவேண்டிய அவசியம் உருவாகிவிடுகிறது.
சவாலான சூழ்நிலைகளிருந்து காத்துக்கொள்ள மான்களின் கால்கள் அவற்றின் பலமாக வெளிப்படுவதுபோல ஒவ்வொரு விலங்குக்கும் ஒவ்வொரு விதமான தகவமைப்பு அவற்றின் சிறப்பான பலமாகச் செயல்படுகிறது.
மனிதனுக்கு அவனுடைய அறிவுதான் முதன்மையான பலம் என்பதால், சூழ்நிலையை உணர்ந்து அறிவை பயன்படுத்துகின்ற பழக்கத்தின் பலனால் எதிரான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் மனவலிமை உருவாகிறது. அத்தகைய சுயமனவலிமையின் பலத்தால் சூழ்நிலையின் தன்மையும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் தப்பிப் பிழைப்பதும், துணிந்து எதிர்ப்பதும் தனிநபர் தேர்ந்தெடுக்கும் அணுகுமுறையாக வெளிப்படுகிறது.
நல்ல பண்புகளோடு முன்னேற்றத்தை நோக்கிய முயற்சிகளோடு வாழ்வது மனிதனின் இயல்பான வளர்ச்சி என்றாலும், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தைரியமும், அவற்றை முறையாகக் கையாளுகின்ற ஆற்றலும் கூடுதலாக இருப்பதே நடைமுறைக்கு உதவுகின்ற பாதுகாப்பான திறமையாகும்.
நடைமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் இயல்பும், அவற்றை சூழ்நிலைக்குத் தகுந்தபடி திறமையாகக் கையாளுகின்ற நுணுக்கமும் உயிர்ப்போடு வாழும்கலைகளாக வெளிப்படுகின்றன. நம்முடைய அணுகுமுறைகளை நேர்மறையாக மேம்படுத்துகின்ற சுதந்திரம் நமக்கு உள்ளது என்று உணர்ந்து, அதன் பலன்களை முழுமையாகப் பெறுகின்ற உரிமையே நம்முடைய முன்னேற்றம் ஆகும்.
நம்முடைய பலம் பலவீனம் ஆகியவற்றை புரிந்துகொண்டு, உலக நடைமுறைக்குத் தேவையான திறமைகளைப் பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொள்வது போலவே, நமக்குள் இயங்கும் நடைமுறையின் பழக்கங்களை, பண்புகளை, அணுகுமுறைகளை மெருகேற்றுவதும் அவசியமான வளர்ச்சியாக உள்ளது.
நம்மை நாம் புரிந்துகொள்வது போலவே நம்முடன் இயங்குபவர்களையும் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சி செய்வதும் வாழ்க்கைக்குத் தேவையான வளர்ச்சி. இதில், சந்திக்கும் யாரையும் முன்தீர்மானங்கள் அமைத்துக்கொண்டு, இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்து அணுகுவது சரியான புரிதலை ஏற்படுத்தாது.
சில அடிப்படை தன்மைகள் பொதுவாகத் தெரிந்தாலும், தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரும் பழகும் தன்மைகளை உணர்ந்து, உணர்வுகளின் வெளிப்பாடுகளைக் கவனித்துப் புரிந்துகொள்ள முயல்வது நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.
தானும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு சூழ்நிலையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்வது இயல்பான பழக்கமாக இருந்தால் அதுவே வாழ்க்கைக்கு அவசியமான நேர்மறையான அணுகுமுறையாக வெளிப்படும்.
# நன்றி .