The open book glittring
Books possess the power to elevate our thoughts and helps to improve our knowledge of skills

புத்தகம் எனும் பொக்கிஷம்: Puththagam Enum Pokkisham: Why We Should Read Books.

யாதுமாகி:

புத்தக வாசிப்பு என்பது உண்மையான உறவுகளுடன்  உரையாடுதல்  போன்ற உணர்வுகளைத் தரக்கூடியது.  மனம் சோர்ந்து போகும் நேரங்களில், அன்பான தாய்ப்போலத் தலையைத் தடவி ஆறுதல் சொல்லக்கூடியது.  குழப்பமான நேரங்களில், தோள்தட்டி நம்பிக்கையூட்டும் தந்தையின் பாதுகாப்புத் தந்து வழிகாட்டக் கூடியது. மதிப்பீடு  செய்யும் உறவினரைப் போல,  நம்மை நாமே சீர்தூக்கிப்  பார்க்கும் அளவுகோலாக விளங்கக்கூடியது.

எந்தச் சூழ்நிலையிலும் பக்கபலமாக இருக்கும் நல்ல நண்பனைப் போல உற்ற துணையாகவும் உடனிருக்கக் கூடியது.  அறியாமை இருளை அகற்றி,  நம் சிந்தனையில் அறிவொளி ஏற்றும் குருவாக உயர்ந்து நிற்கும் பண்பு கொண்டது.  இவ்வாறு பல்வேறு அவதாரங்களை எடுக்கும் புத்தகங்கள் யாதுமாகி நின்று, கேட்டவருக்குக் கேட்டபடி, வழங்கும் வள்ளல் தன்மை உடையது.

பாதுகாப்புக் கருவி:

இன்றைய சூழ்நிலையில் வீட்டில் தனிமையை உணரும் பிள்ளைகள் தடம் மாறும் அபாய நிலையிலிருந்து, அவர்களைக் காக்க ஒரே உபாயம் அறிவுதான்.  இந்த அறிவு ‘அற்றம் காக்கும் கருவி’யாகச் செயல்பட்டுப்  பாதுகாக்கும் திறன்  படைத்தது.  இத்தகைய அறிவை பெறுவதற்கான சிறந்த வாய்ப்புப் புத்தகங்கள்தான்.

The open book spreads the wise words
A book uplifts our thoughts by its wise words
நீர்  அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்;  தான்  கற்ற
நூல் அளவே ஆகுமாம்  நுண்  அறிவு

என்ற மூதுரையின் கருத்துக்கேற்ப, நூல்பல கற்பது நுண்ணறிவை வளர்க்கும் வழியாகும்.  நடைபயணமாகச் செல்வதைவிட இடத்துக்கேற்ற வாகனம் பயன்படுத்துவது நமது பயணத்தை எளிமையாக்குகிறது.  அதுபோல, பண்பில் உயர்ந்தவர்களின் அனுபவ நூல்கள், வாழ்க்கைப் பயணத்தில் நாம் பாதுகாப்பாகச் செல்ல உதவும் அறிவு வாகனமாகும்.

கால  இயந்திரம் (Time Machine):

புத்தகம் அதில் எழுதப்பட்டுள்ள காலத்திற்கே நம்மை இட்டுச்செல்லும் காலஇயந்திரம்  ஆகும்.  இதனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மன்னனின் வீரம், நாட்டுமக்களிடம் அவனுக்கிருந்த அன்பு, அரசியல் நேர்மை,  நிர்வாகத்திறமை, கலைஅறிவு, நாட்டின் வளர்ச்சியைத் தன் உயிரினும் மேலாகக் கருதிய அர்ப்பணிப்பு உணர்வு,  என ஒரு தலைவனின் தகுதிக்கு  முழு மாதிரி வடிவம் நம்மால் காணமுடிகிறது.

லியோ டால்ஸ்டாய் எழுதிய புத்தகங்கள் காந்தியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதாம்.  வாழ்க்கையின் எளிமையும், நோக்கத்தின் தூய்மையும் பற்றிய கருத்துகள் காந்தியின் மனதில் விதைகளாக விழுந்தனவாம். இவையே பின்னாளில் தமது கொள்கைகளாக எழுந்தன என்று மகிழ்ச்சியோடு டால்ஸ்டாயிடமே பகிர்ந்துகொண்டார் காந்தி.

அதற்கு அவர், தான் இத்தகைய சிறந்த கருத்துகளை எழுதுவதற்குக் காரணம் தமிழின் தன்னிகரற்ற நூலான திருக்குறள்தான் என்று காந்தியிடம் தெரிவித்தார்.  எந்தப் புத்தகத்தில் யாருக்கான விதைகள் உள்ளன என்று தெரியாது. புத்தகங்கள் விதைப்பதற்காகக் காத்திருக்கின்றன. நாம் நம் மனதை நன்கு பண்படுத்தி விதைகளைத் தேடுவோம், விழைவின் விளைச்சலைக் காணுவோம்.

எதிர்காலத்தில் நம் நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திட வேண்டுமெனில், கடந்த காலத்தின் பெருமையும், தியாகமும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.  நிகழ்காலத்தின் கடமைகளை நிறைவேற்றும் தகுதியும் வேண்டும்.  எதிர்காலம் பற்றிய கணிப்பும் அதற்கான உழைப்பும் வேண்டும்.  இவ்வாறு மூன்று காலத்துக்கும் பயணம் செய்து சிந்திக்க உதவும் புத்தகம் சிறந்த  கால இயந்திரமாகும்.

சுற்றுலா வாகனம்:

காலை கதிரவனின் பொற்கிரணங்களால் காவிரிநதி பொன்னிறத்தில் தகதகவென மின்னியதாகப் படிக்கும்பொழுதே, அந்தக் காட்சி நம் கண் முன்னே விரிந்து நம்மை உற்சாகமூட்டும்.  மலையில் பிறந்து மனதை நிறைக்கும் அருவியின் அழகும், கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளமும், பனிமலையின் உறைய வைக்கும் குளிரும்,  நம்மை இருந்த இடத்திலேயே  உலகம் சுற்றிவரச்  செய்து உள்ளத்தைச் சிலிர்ப்பூட்ட  வைக்கும் அற்புதமான சுகானுபவம்.

An open book shows the scenery of river and water falls are between mountains
Books transport us to different worlds and introduce new people these are interesting and engaging to the mind.

 

புத்தகத்தின் எழுத்துகள் வண்ணக்காட்சிகளாகத் தோன்றி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் ஆச்சர்யமான  மந்திரப் பெட்டகம்.  இது இன்றைய காட்சிப் பெட்டகங்களாலும்  தரமுடியாத  நுணுக்கம்.   இந்த நுணுக்கமான ரசனையில் ஏற்படும் புத்துணர்ச்சி  நம்மைப் புதுத் தெம்புடன் செயலாற்ற வைக்கும் என்பது சத்தியமே.

பயிற்சியாளர்:

உடல்நலம் ஆரோக்கியமாக  இருக்க சத்துள்ள காய்கனிகள், கீரைகள், மாவுசத்து,  புரதம் என  சரிவிகித உணவு  தேவைப்படுகிறது.  அதுபோல மனநலம்  ஆரோக்கியமாக இருக்க  நல்ல நூல்களைப் படிப்பது அவசியம் ஆகிறது.

ஒரே உடற்கூறு கொண்டவராக இருந்தாலும் ஒருவரால் நூறு கிலோ பளுவைத் தூக்கமுடிகிறது மற்றொருவரால் இருபது கிலோவைக்கூட தூக்க முடிவதில்லை.  இதற்கு முக்கியமான காரணம் அவரவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் பயிற்சியுமே.  அதுபோல மனம் நல்ல வலுவுடன் இருப்பதற்குத் தேவையான பயிற்சியை வழங்க, புத்தகங்கள் சிறந்த பயிற்சியாளராகச்  செயல்படுகின்றன.

புத்தகங்கள் படிப்பதனால் வாழ்க்கையில் போராட்டமே இல்லை என்பது பொருளல்ல.  ஆனால் மழை வரும் என முன்பே உணர்த்தும் மண்வாசனையும், கார்மேகமும் போலவோ அல்லது வந்த மழைக்குக் கையில் உள்ள குடை போலவோ,  தகுந்த  எச்சரிக்கையும், பாதுகாப்பும்  தரும்  சக்தி புத்தகத்திற்கு  உள்ளது.

உற்றநோய்   நீக்கி   உறாஅமை  முற்காக்கும்
பெற்றியார்ப்   பேணிக்   கொளல்.

என வள்ளுவர் கூறியதுபோல அறிவார்ந்த பெரியோராகப் புத்தகங்கள் நம்மை நல்வழி  நடத்தும் சக்திப் பெற்றவை.

அன்பு தேவதைகள்:

The fairy of the book is waiting to give blessings
The fairy of the book is waiting to give blessings of knowledge and experience.

புத்தகங்கள் கம்பீரமாகக் காட்சித் தரும் அற்புதக் கலை வடிவமாகும்.  இனிய இளமைக்கும், கனிந்த முதுமைக்கும், எல்லாச் சூழ்நிலைகளுக்கும் (evergreen) உற்றத் துணையாக  இருந்து  புத்தகங்கள் நம்மைப் பண்படுத்துகின்றன.

தன்னிடம் உள்ள பொக்கிஷங்களைப் பாரபட்சமின்றி  அப்படியே கைத்திறந்து அள்ளித்தரும் புத்தகங்கள் உயர்ந்த  குருவின் பூரணமான அன்பின் அருள் வடிவமாகும். அந்த அன்புக்குத் தலை வணங்கி  மகிழ்வோடு நே(வா)சித்தால்,  புத்தகங்கள்,  நாம் தலை நிமிர்ந்து வாழ வரம் தரும் தேவதைகளாகும்.

 

#  நன்றி.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *