CCTV camera
The conscience is that cctv of observing and recording all our thoughts

நேர்மையின் நேர்காணல். Honesty is the best policy. Nermaiyin Nerkaanal.

நேர்மையின் பலன்.

ஒரு நகரத்தில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் முக்கியமான ஒரு பதவிக்கு ஆள் தேவையாக இருந்தது.  அந்தப் பணிக்குத் தகுதியான ஒரு நபரை தேர்வு செய்வதற்கு முறையான நேர்காணல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்யப்பட்டது.

அறிவிப்பில் உள்ளபடி, பணிக்குத் தேவையான முழுமையான தகுதிகள் உள்ளவர்கள் மட்டும் நேர்காணலுக்கு வரவேண்டும் என்றும் அவர்களுள் ஒருவரை மட்டுமே நிர்வாகம் தேர்வு செய்யும் என்றாலும் நேர்காணலில் பங்குபெறுகின்ற ஒவ்வொரு நபருக்கும் பயணச்செலவாக ரூபாய் 500/- அன்றைய தினமே கொடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட நாளில் நேர்காணலுக்கு வந்திருந்த போட்டியாளர்கள் அனைவரும் ஒரு பெரிய ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர்.  அவர்களுள் ஒருவன் அடுத்து இருந்தவனிடம், “நேர்காணலுக்கு வருகின்ற எல்லோருக்குமே ஐநூறு ரூபாய் கொடுக்கிறார்கள் என்றால் அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கும்!” என்றான்.  அதற்கு அவன், “பணத்தை இப்படி வீணாக செலவழிக்கும் இவர்கள் சரியான ஊதாரிகளாக இருப்பார்கள்,” என்றான். 

அவர்கள் அப்படிப் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்றொருவன்,  “கொடுப்பதற்கும் மனம் வேண்டும், இவர்கள் நல்லவர்கள் அதனால்தான் வேலையை எதிர்பார்த்து வருகின்றவர்களைப் பற்றி யோசித்து, அவர்களுடைய பயணச்செலவுக்கு என்று கொடுக்கிறார்கள்”, என்றான்.  

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, நேர்காணல் நடக்கும் அறைக்கு ஒவ்வொரு நபராக அழைக்கப்பட்டனர்.  நேர்காணல் முடித்த ஒவ்வொரு நபருக்கும் அறிவிப்பில் கூறியபடியே, ஒரு கவர் கொடுத்து அதில் பணம் இருக்கிறது என்று சொல்லி அனுப்பினார்கள்.

அந்த நேர்காணல் அறையிலிருந்து வெளிவந்த ஒவ்வொருவரும், சிறிய சந்தேகத்தோடு நின்று கவரை பிரித்துப் பார்த்துவிட்டு, பின்னர் மகிழ்ச்சியோடு அந்த ஹாலிலிருந்து வெளியேறினர். இதையெல்லாம் பார்த்தபடி பொறுமையாக உட்கார்ந்திருந்து, பின்னர் கடைசி நபராக உள்ளே சென்றவனுக்கும் அதே நடைமுறைதான்.

வழக்கமான கேள்விகளோடு நேர்காணல் முடிந்ததும் அவனுக்கும் அதேபோல ஒரு கவர் கையில் கொடுக்கப்பட்டது.  அவனிடமும் கவரில் பணம் இருக்கிறது என்று சொல்லப்பட்டது.  நன்றி கூறிவிட்டு, அறையிலிருந்து வெளியே வந்த அவனும் மற்றவர்களைப் போலவே கவரைப் பிரித்துப் பார்த்தான்.  ஆனால், பார்த்தவுடன் சற்று அதிர்ச்சி அடைந்தான்.

உடனே, அனுமதி கேட்டு மேலாளர் அறைக்குள் சென்ற அவன் தன்னிடம் இருந்த கவரை அவரிடம் நீட்டியபடி, “சார் இந்தக் கவரில் 500/- ரூபாய் நோட்டு தவறுதலாக இரண்டு வைக்கப்பட்டு இருக்கிறது”, என்று கூறினான். 

மேலாளர் அவனைப் பார்த்துப் புன்னகையோடு, “இந்த நேர்காணலில் நீ தேர்ச்சி பெற்று விட்டாய்”, என்று கூறினார். சட்டென்று அவர் கூறியதைக் கேட்டதும், சிறிய திகைப்போடு மகிழ்ச்சி அடைந்தான்.  அவருக்கு நன்றி கூறிவிட்டு, தன் கையில் இருந்த கவரை மீண்டும் நீட்டினான். 

ஆனால் அவரோ, அவன் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், கையில் உள்ள கவரை வாங்கிகூட பார்க்காமல், அவனுடைய தோளைத் தட்டி வாழ்த்துகள் கூறுவது அவனுக்கு வியப்பாக இருந்தது.

அப்போது அந்த மேலாளர் அவனைப் பார்த்து, “நேர்காணலுக்கு வந்த ஒவ்வொரு நபருக்கும், கொடுத்த ஒவ்வொரு கவரிலும் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகள்தான் வைக்கப்பட்டிருந்தன.  ஆனால், ஒவ்வொருவரும் தனக்குக் கொடுத்த கவரில் மட்டும்தான் தவறுதலாக இரண்டு நோட்டுகள் இருப்பதாக நினைத்துகொண்டு கிடைத்தவரை இலாபம் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியோடு வெளியேறி விட்டனர். 

அந்தக் கவரில் கூடுதலாக இருந்த பணம் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்ற எண்ணம் இல்லாமல், இது வேறு யாருக்கும் தெரியாது என நினைத்துக்கொண்டு, தங்களுக்குள் இருக்கும் மனசாட்சி எனும் CCTVஐ மறந்துவிட்டு அறியாமையில் அமைதியாகச் சென்றுவிட்டார்கள்.      

அந்தப் பணம் தவறுதலாக வைக்கப்பட்டது என்று தோன்றியதும், அடுத்தவர் பணம் நமக்கு வேண்டாம் என நினைத்து, அதை உரிய இடத்தில் திருப்பித் தரவேண்டும் என்று உன்னைத் தவிர வேறு எவரும் உள்ளே வரவில்லை.

வணிகத்தில் தொடர்புடையவர்களுள் சிலர், நம் அலுவலகத்தில் பதவியில் இருப்பவர்களின் தேவைகளைப் பயன்படுத்தி, ஆசையைத் தூண்டுகின்ற வகையில், இது போன்ற வாய்ப்புகளை அவ்வப்போது ஏற்படுத்துவார்கள். 

அத்தகைய நேரத்திலும் சஞ்சலப்படாமல், மனஉறுதியோடும் மனசாட்சிக்கு நேர்மையாகவும் பணியாற்ற வேண்டிய பொறுப்புதான், மிக அவசியமான தகுதியாக உள்ளது.  அதனால்தான் இந்த நேர்காணல் நேர்மைக்கான நேர்காணலாக நடத்தப்பட்டது”, என்று அந்த மேலாளர் விளக்கம் கொடுத்தார். 

மேலும், “தகுதிகள் என்பது கல்வி, அறிவு, நுட்பம் என்று வெளியிருந்து பெறுபவை மட்டுமே அல்ல, மனிதனாக வளரும்போதே கூடவே வளருகின்ற நேர்மைதான் ஒரு மனிதனின் முதன்மையான தகுதி”.

“ஒருவரிடம் எவ்வளவு திறமைகள் இருந்தாலும் அவருடைய நேர்மைதான் அந்தத் திறமைகளுக்கான உண்மையான பலனைக் கொடுக்கும், அதுவே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு அடிப்படையாகவும் இருக்கும்”, என்று அவர் கூறிய பிறகுதான் உண்மையான நேர்காணல் நடந்தவிதமும், அந்தப் பதவியின் பொறுப்பும் அவனுக்குப் புரிந்தது. 

தன்னிடம் இயல்பாக உள்ள பண்பும், நேர்மையான அணுகுமுறையும் தனக்கு நல்ல பலனைத் தந்தது என்ற உண்மை உணர்ந்ததும் அவன் அந்த மேலாளருக்கு மீண்டும் மகிழ்ச்சியோடு நன்றி கூறினான்.

 

#   நன்றி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *