மனதின் பார்வை:
இயல்பாக உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு காட்சியும், பார்ப்பவரின் தனிப்பட்ட பார்வைக்கு ஏற்பவும் அவரது கண்ணோட்டத்திற்கு ஏற்பவும் வெவ்வேறு விதத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது.
இந்தப் பார்வை என்பது பெரும்பாலும், அவரவர் இயல்பில் அமைந்திருக்கும் பதிவுகள், வாழும் சூழ்நிலை, வளர்ப்பு, வாழ்க்கை அமைப்புப் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடுகிறது.
பரவலான பார்வை, மேலோட்டமான பார்வை, குறுகிய பார்வை, கூர்மையான பார்வை, விசாலமான பார்வை, ஆழமான பார்வை என விதவிதமாக வகைப்படுத்தப்படுகின்ற பார்வைகள் காலத்திற்கேற்பவும் மாற்றங்களுக்கு உட்படுகின்றன.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகின்ற பார்வை (Perspective) அந்த மனிதரிடம் தனித்தன்மையை உருவாக்கி, அதுவே அவரது வாழ்க்கையை வடிவமைக்கவும், சூழ்நிலைகளைக் கையாளவும் உதவுகின்ற “அடிப்படையான attitude” ஆக வெளிப்படுகிறது.
இது, நேர்மறையான சிந்தனைகள், ஆரோக்கியமான மனவளர்ச்சி, நல்ல மனிதர்கள், சிறந்த புத்தகங்கள் மற்றும் அறிவார்ந்தவர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் வழியாக மேலும் தெளிவான நிலையை அடைகிறது.
வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்திலும் சுயகருத்தை ஏற்படுத்துகின்ற பார்வை, தன்னை அவதானிக்கும் உள்நோக்குப் பார்வையாகவும், மற்றவர் பார்வைகளைப் புரிந்துகொள்ளும் அடிப்படை அளவுகோலாகவும் இயங்குகிறது.
கணித வடிவியல் வரைபடம் (geomentry) உருவாக்கும்போது, ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும் பலகோடுகள், அவை தேர்ந்தெடுக்கும் கோணங்களைப் பொறுத்து குறுங்கோணம் (acute angle), செங்கோணம் (right angle), விரிகோணம் (obtuse angle) என்ற வெவ்வேறு டிகிரியில் அமைகின்றன.
அதுபோலவே, மனம் என்ற ஒரு புள்ளியில் தொடங்கும் பார்வை தனது கோணத்திற்கு ஏற்ப உணர்வுகள், உறவுகள், நண்பர்கள், சமுதாயம், கல்வி, வேலை, குடும்பம் என வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஏற்படுகின்ற மாற்றங்களையும் அதற்கேற்ற அனுபவங்களையும் உணர்வதற்கு அடிப்படையாக இருக்கின்றன.
சந்திக்கும் நிகழ்வுகளைச் சில வினாடிகளில் கடந்துவிடுவதோ, கற்றுக்கொள்வதோ, விவாதத்திற்கு உரியதாக எடுத்துக்கொள்வதோ, வியப்பதோ, விஸ்வரூபமாக்குவதோ பார்க்கும் கோணத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.
பழைய கருத்துகளைத் தன்னுடைய பார்வையோடு சேர்த்துக் காலத்துக்கு ஏற்றபடி சிந்திக்கவும், மற்றவரின் பார்வையில் உள்ள புதுமைகளை வரவேற்கவும், நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ள மனதில் புதிய நேர்மறையான வளர்ச்சிகள் ஏற்படுகின்றன.
தெளிவான காட்சிகளைக் காட்டுகின்ற இந்தப் பார்வை மாற்றமே, மாறுகின்ற சூழல்களைக் கையாளுவதற்கான அடிப்படை சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் தீர்மானித்து, அதற்கேற்ற வகையில் முன்னேற்றமான அணுகுமுறைகளைத் தொலைநோக்குப் பார்வையோடு வெளிப்படுத்துகிறது.
அவரவர் பார்வையின் தன்மைக்கு ஏற்ப உள்ளார்ந்த தகுதிகளின் வளர்ச்சி அமைகிறது. இதனால் பெரும்பாலான சூழ்நிலைகளில் ஒருவருடைய தன்மையை, முன்னேற்றத்தை, வாழ்க்கையை அவருடைய பார்வையே நிர்ணயிக்கிறது.
உதாரணமாக,
ஒருவர் மற்றவருக்கு உதவுகின்ற காட்சியைப் பார்க்கும் நபர், உதவி செய்வதாகப் பார்ப்பதோ அல்லது உதவி பெறுவதாகப் பார்ப்பதோ அல்லது புதுமையான கோணத்தில் வேறுவிதமாகக் கவனிப்பதோ அவரது தனிப்பட்ட பார்வையாக உள்ளது.
இத்தகைய பார்வை இயல்பானதாக இருந்தாலும் அல்லது மாறுபட்ட கோணமாக இருந்தாலும் அதற்கேற்ற சிந்தனையை உருவாக்கி, அதை செயல்படுத்துவதற்கு தேவையான வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் அந்தப் பார்வையே காட்டுகிறது.
குறுகிய எண்ணங்கள், சுயநலச் சிந்தனைகள் இல்லாத விரிவான பார்வை என்பது, எதிராக உள்ள பார்வைகளையும், கோணங்களையும் ஆரோக்கியமாகச் சிந்திக்கும் தன்மையுள்ள மனதின் பார்வையாக 360 டிகிரியிலும் இயங்குகிறது. இது, நாகரிகமான நடத்தைகளை, ஆக்கபூர்வமான வளர்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மிகச்சிறந்த மனவளமாக இருக்கிறது.
இதற்கெல்லாம் அப்பாற்பட்ட நிலையாக செயல்படுகின்ற முப்பரிமாண பார்வை, முழுமையான பார்வையாக விரிந்து வியக்கத்தக்க விளைவுகளின் தொடக்கமாகச் செயல்படுகிறது.
*முறையான பயணச்சீட்டுடன் தென் ஆப்பிரிக்கா இரயிலில் பயணம் செய்தபோது ஆங்கிலேயர்களால் வெளியே தள்ளப்பட்ட காந்தி, தனக்கு நேர்ந்த நிகழ்வை மாறுபட்ட கோணத்தில் பார்த்த பார்வை, தாய்நாட்டின் விடுதலைக்காக போராட வேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்தியது.
இதனால் ஏற்பட்ட மாற்றம், வழக்கறிஞராகப் பார்த்திருக்க வேண்டிய மோகன்தாஸ் காந்தியை, தேசத்தந்தை மகாத்மா காந்தியாக, உயர்வாகப் பார்க்க வைத்திருக்கிறது.
*நேருவின் பதவி காலத்தில், இராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு அமெரிக்க அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாலும், இந்திய அரசுக்கு உத்தரவாதம் கொடுக்க அமெரிக்க வங்கிகள் தயாராக இல்லை.
இந்தச் சிக்கலான சூழ்நிலையை மாறுபட்ட கோணத்தில் பார்த்த காமராஜர், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க வங்கிகளின் அனுமதியை ரத்து செய்யுமாறு நேருவிடம் கூறினார். கர்மவீரர் காமராஜரின் ராஜதந்திரமான இந்த அரசியல் பார்வை, அமெரிக்க வங்கிகளினால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்து வைத்ததாகக் கூறப்படுகின்றது.
*பசியின் காரணமாகக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை என அறிந்தவுடன், புதிய முயற்சியாக பள்ளியிலேயே மதிய உணவளித்து பிள்ளைகளை கல்விகற்க வரவழைத்த காமராஜரின் சமுதாயப்பார்வை, நாளைய மன்னர்கள் கட்டாயம் கல்வி அறிவோடு(ம்) இருக்க வேண்டும் என்ற கிங்மேக்கரின் முப்பரிமாண பார்வையாக உள்ளது.
இன்றைய நவீன உலகில், இத்தகைய அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட சமுதாயமாக, தன்னிறைவு பெற்று வாழவேண்டும் என எதிர்நோக்குவது இன்றைய காலத்தின் நியாயமான பார்வை.
இவ்வாறு, உலக வளர்ச்சியை, நாட்டின் பாதுகாப்பை, சமுதாய முன்னேற்றத்தைத் தருகின்ற மாபெரும் வெற்றிகளும் சாதனைகளும், சூழ்நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ளும் தெளிவான மனதின் முப்பரிமாண பார்வையால் சாத்தியமாகிறது என்பது தெளிவாகிறது.
மிகப்பெரிய வெற்றியாளர்கள், சாதனையாளர்கள், வள்ளல்கள், தத்துவ மேதைகள், அருளாளர்கள் என முழுமையாக ஒளிவீசி வாழ்ந்தவர்கள் அனைவரும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த மேஜிக் மூவ்மெண்ட்களுக்கு அடிப்படையாக இருந்தது அவர்களது முப்பரிமாண பார்வை எனும் லாஜிக்தான் என்பது இன்றைய நம்முடைய பார்வையில் புரிகின்றது.
# நன்றி.
