நூறு சதவிகிதம் வெற்றி:
ஒரு இலக்கை நோக்கி உழைக்கும்போது வெற்றி பெறவேண்டும் என்று நினைத்து செயல்படுவது இயல்பான நடைமுறை. இதில் நூறு சதவிகித வெற்றி உறுதி என்று கூறுகின்ற இந்த வாக்கியம், சில கல்வி நிறுவனங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான (competitive exams) பயிற்சி மையங்களின் விளம்பரங்களில் இடம்பெறுவதைப் பார்க்கிறோம். அறிமுகம் இல்லாத மாணவர்களின் வெற்றியை இத்தகைய உறுதியோடு அவர்களால் எவ்வாறு கூறமுடிகிறது?
இது, நேர்மையான உறுதிமொழியாக இருக்கும்பட்சத்தில், அத்தகைய தேர்வுகளுக்குத் தயார்படுத்துகின்ற தங்களுடைய பயிற்சி முறையின்மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
1. இலக்கின் வெற்றிக்குத் தேவையான அடிப்படை தகுதியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது.
2. கடுமையான உழைப்பை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது.
3. நேரத்தைக் கையாளும் திறனுக்குப் பழக்கப்படுத்துவது.
4. தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் மாதிரித் தேர்வுகள் மூலம் நன்றாக பயிற்சிகள் அளிப்பது.
5. விளைவுகள் எதுவாயினும் தொடர்ந்து வருகின்ற வாய்ப்புகளில் விடாமுயற்சியோடு போராடும் மனநிலையை ஏற்படுத்துவது.
என வெற்றிக்கு அவசியமான திட்டங்களை முறையாகச் செயல்படுத்துகின்ற நிறுவனம், இதற்கு முழுமையான ஒத்துழைப்புத் தருகின்ற மாணவர்களோடு இணைந்து, ஒரே இலக்கை நோக்கி இயங்கும் உழைப்பே நூறுசதவிகிதம் உறுதியான வெற்றிக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது.
நிர்வாகம் (mangement):
மேற்கூறிய நிகழ்வில் இரண்டு விதமான நிர்வாகம் இணைந்து செயல்படுகிறது.
ஒன்று, நிறுவனத்தின் திட்டமிட்ட பயிற்சிகளை ஏற்றுக்கொண்டு, அதன் மூலமாக வெற்றி அடைவதற்கு தன்னை தானே கையாளுகின்ற மாணவரின் சுயநிர்வாகத் திறன்.
இரண்டு, வெற்றிக்குத் தேவையான தெளிவான திட்டங்கள், குறிப்பிட்ட காலவரையறைக்குள் முறைப்படுத்தப்பட்ட பயிற்சிகள், மாணவர்களுக்கு மனஅழுத்தம் தராத வகையில் கையாளும் திறன், தங்கள் நிறுவனம் மீது இருக்கும் நம்பிக்கையை மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் உழைப்பு என இருதரப்புக்கும் நன்மை தரும் வகையில் (win win situation) பாதுகாப்பாக இயங்கும் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பு.
இவ்வாறு “நிர்வாகம்” எனும் பண்பு செயல்படும் விதத்தினால், அது தனிமனிதனின் வெற்றிக்கு மட்டும் உதவுகிறதா அல்லது தன்னோடு இணைந்திருக்கும் குழுவினரின் வெற்றிக்கும் உதவுகிறதா என்று தீர்மானிக்கப்படுகிறது.
தனிமனித நிர்வாகத்திறன்:
1.ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் நூறு சதவிகித மதிப்பெண்கள் என்பது அனைவருக்கும் உறுதியான இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், தன்னுடைய நூறு சதவீத உழைப்பை முதலீடு செய்வதினால் பெறுகின்ற மதிப்பெண்கள் எதுவாயினும் அது தனிப்பட்ட அந்த மாணவனின் உழைப்புக்குக் கிடைக்கும் வெற்றி.
அதுபோல எத்தனைகோடி மக்கள் முயற்சி செய்தாலும், ஒரு தனிநபரின் உழைப்பிற்கு ஏற்ற உறுதியான வெற்றி என்பதும் அந்தத் தனிநபருக்காகக் காத்திருக்கும் வெற்றி.
2.ஓட்டப்பந்தயத்தில் எத்தனைபேர் ஓடினாலும் முதல் மூன்று பரிசுகள் மட்டுமே நிச்சயம் என்று தெரிந்தாலும், ஓடுகின்ற அத்தனைபேரும் கடைசிவரை முழுவதுமாக ஓடுகின்ற நிலையில் நூறு சதவிகித விடாமுயற்சியே அவர்களுக்குக் கிடைக்கும் முதல் வெற்றி.
இதுபோன்ற போட்டியான சூழ்நிலையில், முந்தைய முயற்சிக்கும் இன்றைய முயற்சிக்கும் இடையில் உள்ள சுயமுன்னேற்றமே வெற்றி என்ற மகிழ்ச்சியுடன், விடாமுயற்சியோடு போராடுகின்ற மனஉறுதியே மகத்தான பரிசாகவும், ஒவ்வொரு நபருக்கும் அவர்களுடைய வருங்கால வெற்றிக்கு நிகழ்காலத்தின் பயிற்சியாகவும் இருக்கிறது.
3.தரையில் பதித்து வைத்த குறுகிய வாயுள்ள பானைக்குள் இருக்கும் வேர்க்கடலையைக் கை நிறைய அள்ளிய குரங்கு கையை அப்படியே வெளியே எடுக்க முடியாமல் சிக்கி தவிப்பதுபோல, கவனத்தைக் கவருகின்ற ஆசையின் வலையில் சிக்கிக் கொள்ளாமல் சுயகட்டுப்பாட்டுடன் இருப்பதும், தவிர்ப்பதும் நூறு சதவிகித மனவுறுதிக்கு கிடைக்கும் வெற்றி.
4.சுயசிந்தனையோடு வரையறுக்கப்பட்ட இலக்கு, சவால்களைச் சந்திக்கும் மனஉறுதி, நேர்மறையான எச்சரிக்கை உணர்வு, கூடுதல் பலத்தோடு திட்டமிட்டுச் செயல்படும் மனமுதிர்ச்சி, விளைவுகளுக்கு பொறுப்பேற்கும் வலிமை ஆகியவை நூறு சதவிகித தன்னம்பிக்கையின் வெற்றி.
5.இத்தகைய வெற்றியை நோக்கிய பயணத்தில் ஏற்படுகின்ற சுய சந்தேகங்களை (self doubt) நேர்மையான, ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் மூலம் உடனடியாக அகற்றி மனதின் வலிமையை மேலும் அதிகப்படுத்திக்கொள்ளும் மனப்பயிற்சி வெற்றிக்கான உழைப்பில் செய்ய வேண்டிய தனிமனித முயற்சி.
6.தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளவற்றின் அடிப்படையான கட்டமைப்புகளைத் திட்டமிட்டு அணுகுவதும், கட்டுப்பாட்டில் இல்லாத விளைவுகளை ஏற்றுக்கொண்டு சூழ்நிலையை நேர்மறையாக எதிர்கொள்வதும் இலக்கை நோக்கி முன்னேறுகின்ற மனிதனின் மனமுதிர்ச்சி.
7.தனக்கு மனஅமைதியைத் தருகின்ற ஆரோக்கியமான சிந்தனைகளையும், தன்னுடைய இலக்கை நோக்கி ஆற்றலோடு செயல்படுகின்ற ஊக்கத்தையும் இணைத்து திட்டமிட்டு வெளிப்படும் நிலையே தனிநபரின் நிர்வாகத்திறனுக்குக் கிடைக்கும் வெற்றியாகும்.
8. உள்ளும் புறமும் தெளிவுபெரும் முயற்சியில் நகர்த்துகின்ற தன்னுடைய அணுகுமுறைகளின் ஒவ்வொரு சிறிய நகர்வும் தனிமனித வாழ்க்கையில் கிடைக்கும் முக்கியமான வெற்றி.
வையத் தலைமைகொள்:
போர் இல்லாத காலங்களிலும், போருக்குத் தயாராகும் வகையில் அனுதினமும் முறையாகப் பயிற்சி செய்வது சிறந்த வீரனின் சுயநிர்வாகத் திறன்.
அத்தகைய திறனோடு, தீவிரமான பயிற்சியில் தன்னை நிர்வாகம் செய்கின்ற போர்ப்படைத் தலைவன், தன்னோடு உடன்வரும் வீரர்களின் நலனையும், அவர்கள் மனநிலையையும் முறையாகக் கவனித்து, போருக்கான முன்னேற்பாடு திட்டங்களும், வெற்றிக்கான வியூகங்களும் அமைத்து, சவாலான சூழ்நிலைகளைத் துணிச்சலோடு கையாளுகின்ற தகுதியோடு, போரின் விளைவுகளுக்கான பொறுப்பை ஏற்று செயல்படுவதுதான் சிறந்த தலைவனின் நிர்வாகப் பொறுப்பு.
இவ்வாறு, தன்னுடைய உணர்வுகளை, செயல்பாடுகளை முறையாகக் கையாள்வதுடன், தன்னுடைய குழுவினரை மனமுதிர்ச்சியோடு வழிநடத்தி, குழுவாக, குடும்பமாக இலக்கை நோக்கி செயல்படுத்துகின்ற நிர்வாகப் பொறுப்பு, வாழ்க்கையைத் தலைமை ஏற்று நடத்துவதற்கும் தேவையான அடிப்படை தகுதி.
பல உணர்வுகளின் கலவையாக உள்ள கடினமான சூழ்நிலைகளைக் கவனமாகக் கையாளுகின்ற திறனும், ரிஸ்க்கான சூழ்நிலைகளில் துணிச்சலாகச் செயல்படுகின்ற மனஉறுதியும், பாதுகாப்பும் நம்பிக்கையும் தரும் வகையில் விளைவுகளுக்குப் பொறுப்பேற்று நிதானத்துடன் செயல்படும் பண்பும் வாழ்க்கையைத் தலைமையேற்று நடத்துகின்ற நிர்வாகத்தில் வெளிப்படுகின்ற தலைமை பண்பு.
இன்றைய நடைமுறையின், கல்வி அறிவு, சமூக அறிவு, அனுபவ அறிவு மற்றும் இவற்றை நேர்மறையாகக் கையாளுகின்ற நேர்மையான பண்புகள் போன்ற போர்த் திறமைகளோடு, மென்மையான உணர்வுகளை முறையாகக் கையாளுகின்ற நுணுக்கமும் சிறந்த தலைவனின் நிர்வாகப் பொறுப்பிற்கு சிறப்பு சேர்க்கும் தகுதிகளாகும்.
வாழ்க்கையின் இயல்பு:

நிர்வாகம் சிறப்பாக இயங்குகின்ற நிலையிலும், வெற்றியும், வெற்றி தாமதிக்கப்படுவதும் தவிர்க்கமுடியாத வாய்ப்புகளாக இருக்கின்றன. வெற்றி என்பது மகிழ்ச்சியைத் தருகின்ற முன்னேற்றம் என்றால், தாமதிக்கப்பட்ட வெற்றி என்பது மனவலிமையைத் தருகின்ற உழைப்பின் நீட்சி, இலக்கை நோக்கிய முயற்சியில் ஏற்படுகின்ற கால நீட்டிப்பு.
வெற்றி, தாமதிக்கப்பட்ட வெற்றி இரண்டுமே வாழ்க்கையில் இயல்பானவை என்ற எண்ணமே மனம் நிதானமாக இயங்குவதற்கு உதவும் சிந்தனைகளை, அணுகுமுறைகளைத் தருகின்றது. இதனால் ஏற்படும் மனவுறுதி விளைவுகள் எதுவாயினும் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து இலக்கை அடைவதற்கான ஆற்றலைத் தருகிறது.
மனசாட்சிக்கு நேரான வாழ்க்கை என்பதையே நூறு சதவிகித வெற்றியாகக் கருதும் உறுதியான தீர்மானம், சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் நிதானத்துடன் அணுகும் நிர்வாகப் பொறுப்பு போன்றவை வாழ்க்கையை அழகான மகுடமாக உருவாக்கும்.
இந்த முயற்சியின் பயணத்தில் கிடைக்கும் மற்ற வெற்றிகளும் அனுபவங்களும் இந்த அழகான மகுடத்தின் மதிப்பை மேலும் உயர்த்துகின்ற இரத்தினங்களாக ஒளிவீசும்.
# நன்றி.