கவனிப்பு (Observation):
நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள் முற்றிலும் நமக்குச் சாதகமான விளைவுகளை மட்டுமே தரக்கூடிய நிலையில், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், நடைமுறையில் நாம் சந்திக்கும் சூழ்நிலைகளில் பெரும்பாலும் நேர்மறையான வாய்ப்புகளோடு, அவ்வாறு இல்லாதவையும் இணைந்தே அமைந்திருக்கின்றன.
இந்நிலையில் இவற்றை கையாளும் அணுகுமுறைகளில் எச்சரிக்கை உணர்வும் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. நேர்மறையான விளைவுகளைப் பெறுவதற்கு உதவுகின்ற இந்த உணர்வு, தகுந்த ஏற்பாடுகளுடன் செயல்பட்டு, விளைவுகளில் கூடுதல் நன்மைகளைப் பெறுவதற்கு உதவுகின்றது.
சூழ்நிலையின் தன்மை அறியும் (awareness எனும்) விழிப்புணர்வு, கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய (beware எனும்) ஜாக்கிரதை, பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ள சுட்டுகின்ற (caution எனும்) குறிப்பு என பலவிதங்களில் வெளிப்படுகின்ற இந்த உணர்வு நேர்மறையான விளைவுகளுக்குப் பெரிதும் உதவுகின்றது.
வருமுன் காக்கும் உணர்வு (Think before you leap):
தடுப்பூசிகள், விமானத்தில் ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் போனில் ஒலிக்கும் அலெர்ட் மெசேஜ் என எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடுகள் நம் வாழ்க்கையோடு இணைந்தே செயல்படுகின்றன.
வருமுன் காப்பதற்கு, அவசர நிலைக்கு, உடனடி உதவிக்கு, துணிந்து செயல்படுவதற்கு என முன்பே சிந்தித்துச் செயல்படுகின்ற நிலையில், சேமிப்பின் இருப்பு, காரின் ஸ்டெப்னி, life jacket, முதலுதவிப் பெட்டி, மெழுகுவர்த்தி, தேர்வுக்கு இரண்டாவது பேனா என நாம் ஏற்பாடு செய்துகொள்ளும் வாய்ப்புகள் அனைத்தும் எச்சரிக்கை உணர்வின் வடிவங்களே.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று உணர்த்தி சில சூழ்நிலைகளைத் தவிர்க்க உணர்த்தும் இந்த உணர்வு, சில சூழ்நிலைகளில் செய்தக்க செய்யாமையானும் கெடும் என்று அறிவுறுத்தி அவற்றை எதிர்கொள்ளும் வகையிலும் வெளிப்படுகிறது.
தவறு நேராமல் இருப்பது ஒரு நல்ல வாய்ப்பு என்றால் தவிர்க்க முடியாமல் நேர்ந்துவிடுகின்ற சூழலில், அதிலிருந்து மீண்டு வருவது மற்றொரு வாய்ப்பாக இருக்கிறது. எனவே, இது முன்னெச்சரிக்கையும், தேவையான சூழ்நிலையில் பாதுகாப்பும் தந்து நல்ல நண்பனாகச் செயல்படுகிறது.
தவறுகளும் திருத்தங்களும் :
குழந்தைகள் புதிதாக, பலப்பத்தால் எழுதும்போது ஏற்படும் தவறு கையால் துடைத்தால் சுத்தமாகி விடுகிறது. பென்சில் பயன்படுத்தி எழுதப்பட்டவை எனில் தவறுகளை அழிக்க ரப்பர் (அழிப்பான்) கூடுதலாகத் தேவைப்படுகிறது.
பேனா பயன்படுத்தப்படுகின்ற நிலையில் தவறுகள் அழித்தலும் அடித்தாலும் பளிச்சென தெரிந்துவிடுகின்றன. ஒயிட்னர் பிழையை மறைத்தாலும் அதுவே பிழையின் இடத்தை வெளிப்படுத்துகிறது.
கையில் ஒளிரும் டிஜிட்டல் கருவிகளை எளிதாகப் பயன்படுத்தும் இன்றைய வளர்ச்சியில் அவற்றில் பதிவாகி ஒளிந்து கொண்டிருக்கும் நிழல்களை எளிதில் நீக்க முடியாத நிலையே உள்ளது.
இந்த நிலையில் நம்முடைய பார்வைகளுக்கும் பாதைகளுக்கும் பாதுகாப்புத் தருகின்ற எச்சரிக்கை உணர்வு தலைமுறை இடைவெளி இல்லாமல் அனைவருக்கும் தேவையான உணர்வாக இருக்கிறது.
Mind The Gap:
சுரங்க இரயில் நடைபாதைக்கும் இரயிலுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் கவனித்துப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும், என்று சொல்லுகின்ற MIND THE GAP என்ற வாசகம், பயணிகள் நேர்மறையான அனுபவத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் வெளிப்படுகிறது.
விழிகள் காட்டுகின்ற வழிகளில் எல்லாம் மனதைச் செலுத்தாமல், சிந்தித்து ஒரு நல்ல நோக்கத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் திசையில் கவனத்தோடு பயணிப்பதுதான் நம்மை நாம் பாதுகாக்கும் அடிப்படையான எச்சரிக்கை உணர்வு.
அவ்வாறு தேர்ந்தெடுத்த பாதையில் எதிர்பாராத சில கடினங்களை எதிர்கொள்கின்ற நிலையிலும், எச்சரிக்கை உணர்வே பொருத்தமான முன்னேற்பாடுகளைச் சிந்தித்துத் துணிந்து செயல்படும் ஆற்றலைத் தருகிறது.
பாதுகாப்பான வகையில் உணர்வுகளை இயக்கி, சந்திக்கும் சூழ்நிலைகளைக் கூடுமானவரை சுமுகமாகக் கடந்து, இலக்கை நோக்கி செல்வதுதான் வாழ்க்கையின் வெற்றி. இதுவே நேரத்தை வீணாக்காமல் பாதுகாப்பாக முன்னேறிச் செல்வதற்கு உதவும் நேர்மறையான வழியாகவும் இருக்கிறது.
எல்லை:
எல்லா உணர்வுகளுக்கும் எல்லைகள் இருப்பதுபோலவே எச்சரிக்கை உணர்வுக்கும் நிச்சயமாக ஒரு எல்லை இருக்கிறது. நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள சூழ்நிலையை சிறப்பாகக் கையாளுவதற்கும், கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை எதிர்கொள்வதற்கும் உதவுகின்ற நிலையே எச்சரிக்கை உணர்வின் நேர்மறையான எல்லை.
இந்த எல்லையைக் கடந்து, அரிதான, எதிரான வாய்ப்புகளை அதிகமாகச் சிந்திப்பதும், அதனால் உருவாகும் பயத்தால் சுருங்கிப் போவதும் எதிர்மறையான உணர்வே தவிர அது எச்சரிக்கை உணர்வு அல்ல.
உடல் நலத்திற்கு தேவையான உணவே ஆனாலும் அதனுடைய எல்லை கடந்த நிலையில் பயன்படுத்தக்கூடாத நிலையை அடைகிறது. அதுபோலவே, எச்சரிக்கை உணர்வை அதனுடைய பாதுகாப்பான எல்லைக்குள் பயன்படுத்துவது ஆரோக்கியமான செயல்பாடு.
சந்திக்கும் சூழ்நிலைகளில் சிறப்பாகச் செயல்படும் வகையில் உணர்வுகளைக் கையாளுவதும், எச்சரிக்கை உணர்வை எச்சரிக்கையோடு பயன்படுத்துவதும் வாழ்க்கையைத் துணிவோடு எதிர்கொள்கின்ற தெளிவு.
# நன்றி .