The bird in the bubble
The bird can fly only after it comes out of the bubble of dream

இலட்சியக் கனவுகள் மெய்ப்பட வேண்டும்: Ideal Dreams Must Come True: Latchiya Kanavugal Meippada Vendum.

Flying white colour bird.
A bird that spreads its wings to make a dream come true

சிந்தனைகளின் ஆக்கம்: 

ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாழ்க்கையைக் குறித்து பலவிதமான கனவுகள் இருக்கின்றன.  அவ்வாறு தோன்றும் பல கனவுகளுள் ஒருசில கனவுகள் சிறந்த இலட்சியங்களாகவும் உருவாகின்றன.  அவ்வாறு கனவு நிலையில் உருவாகும் ஒரு இலட்சியம் பலவிதமான சூழ்நிலைகளையும், பல படிநிலைகளையும் கடந்து பயணித்த பின்னரே வெற்றியடைகிறது. 

இவ்வாறு கனவு நிலையிலிருந்து ஒவ்வொரு படிநிலையாக வளர்ச்சி அடைகின்ற குறிக்கோள், ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு உறுதியாக இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை, நேர்மறையான மனதின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளே வழங்குகின்றன. 

இத்தகைய ஆக்கபூர்வமான நேர்மறை சிந்தனைகளால், ஒவ்வொரு நாளும் பலகோணங்களில் செதுக்கப்பட்டு, சீராக வடிவமைக்கப்பட்டு, வளர்க்கப்படுகின்ற குறிக்கோளே, நடைமுறையில் எதிர்கொள்ளும் சவால்களையும், எதிரான சூழ்நிலைகளையும் எதிர்த்துப் போராடும் சக்தியோடு வலிமை பெறுகிறது.  இத்தகைய வலிமையான குறிக்கோளே சிறந்த வெற்றியைத் பெறுவதற்கான முழுமையான தகுதியோடு வெளிப்படுகிறது.  

ஆனால், மனதில் இத்தகைய ஆக்கப்பூர்வமான நேர்மறை சிந்தனைகள் இல்லாத நிலையில் கனவில் உருவாகும் குறிக்கோள், பயம், தயக்கம், சந்தேகம் எனும் தடைகளைத் தகர்க்க இயலாமல், எதிர்மறை உணர்வுகளுக்குள் சிக்கி கனவாகவே அடைபட்டு விடுகிறது.  மனதில் உள்ள தடைகளைத் தகர்த்து வெற்றியைத் தருவதற்கு வெளியிலிருந்து வேறுஒரு அதிசயம் வரும் என்ற கற்பனையோடு காத்திருக்கிறது. 

The hatchling is ready to come out by breaking the shell
The hatchling is ready to come out by itself breaking the shell

தன்னுடைய கூட்டிற்குள் முறையாக உருவாகி, சீராக வளர்ச்சிப் பெறுகின்ற பறவை, பழகிப்போன அந்தக் கூட்டிலேயே அடைபட்டுத் தேங்கிவிடுவதில்லை.  தன்னுடைய வளர்ச்சியை மேம்படுத்த, தான் செய்யவேண்டிய முதல்வேலையே தடையைத் தகர்ப்பதுதான் என்று உணர்ந்து துணிந்து முயற்சிசெய்து வெளிஉலகை நம்பிக்கையோடு சந்திக்கின்றது.

பரந்துவிரிந்திருக்கும் வானில் சுதந்திரமாகப் பறந்துதிரிவதே மகிழ்ச்சி என்ற குறிக்கோளில் வெற்றிப் பெறுவதற்கு,  முதலில் தன்னை முழுவதுமாகத் தயார்ப்படுத்திக்கொள்கிறது.  தன்னுடைய திறனை சரியாக அறிந்து, தன்னம்பிக்கை, தைரியம் என்ற சிறகுகளை விரித்துச் சுதந்திரமாகப் பறந்து, தனது குறிக்கோளில் வெற்றி அடைகிறது.  இவ்வாறு குறிக்கோளை நோக்கி சுயஆற்றலோடு பறப்பதற்குத் தகுதியுள்ள பறவை, ஒருபோதும் பறக்கும் கம்பளத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதில்லை. 

எனவே, மனதில் உருவாகும் சிறந்த குறிக்கோள், நடைமுறை உலகில் வெற்றியை நோக்கி சுதந்திரமாகப் பறப்பதற்கு ஆற்றலோடு செயல்படுகிறதா அல்லது சாதகமான சூழ்நிலை எனும் கூட்டுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறதா என்பதை சீர்தூக்கிப் பார்க்கும் அகஆய்வு தனிநபரின் தகுதியாக இருக்கிறது.  

தன்னையறிதல்: 

A diary has written the word that My Journal
A self-journal is useful for discovering our thoughts, growth, and mental well-being.

ஞானிகளும், மாபெரும் மனிதர்களும் மட்டுமின்றி சாமான்யன் என்று கருதப்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னையறிதல் எனும் அகஆய்வு அடிப்படையான அளவில் தேவையான ஒன்று. 

இது, ஒரு தனிமனிதன் தன்னுடைய உண்மையான பலம், பலவீனம், குணம், குற்றம், சிந்தனை, குறிக்கோள், முயற்சி, வாழ்க்கை போன்றவற்றை உள்ளபடியே அறிந்து கொள்வதற்கும், சூழ்நிலையை முறையாக அணுகுவதற்கும் தேவையான தெளிவை ஏற்படுத்துகிறது. 

பெரும்பாலும் நாம் அனைவரும் இந்தத் தெளிவோடுதான் வாழ்கிறோம், என்றாலும் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தொடர்ந்து நம்மை நாம் கவனமாகப் புதுப்பித்துக்கொள்வதும் அவசியமாகிறது.  சாதகமான சூழ்நிலையில் இயல்பாக வெளிப்படுகின்ற செயல்பாடுகளைச் சாதகமற்ற சூழ்நிலையிலும் வெளிப்படுத்துவதற்கு கூடுதலான ஆற்றல் தேவைப்படுகிறது. 

சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும், மற்றவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இருப்பதைப்போலவே, நம்மையே நாம் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்து நமக்குள் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்துகின்றது.  இந்த வெளிச்சம் நாம் பயணிக்கும் குறிக்கோளின் பாதையை மேலும் தெளிவாக்குகிறது. 

தன்னுடைய நிறைகளையும், குறைகளையும் உள்ளபடியே உண்மையாக அறிந்துகொள்ளும் மனமே சுயமதிப்பீட்டின் வெளிப்பாடாக தன்னம்பிக்கையோடு செயல்படுகிறது.  இதனால் உருவாகும் நேர்மறையான புதிய சிந்தனைகளே தடைகளைத் தகர்க்கும் வலிமையாக ஆற்றலோடு செயல்படுகிறது.  

எது நேர்மறை சிந்தனை?:

Beautiful roses in the plants
Thorns of rose plant remind us that beauty and strength coexist

அழகான சில பூக்கள் இருக்கும் ரோஜா செடியில் எண்ணற்ற முட்களும் இருப்பது இயற்கை.  இதைப் போலவே, நாம் வசப்படுத்த வேண்டிய வாய்ப்புத் தெளிவாகத் தெரிந்தாலும், அதன் இணைப்பில் இருக்கும் சில எதிரான சூழல்களையும் அறிந்து, அவற்றை எச்சரிக்கையாகக் கையாளும் திறனே நேர்மறையான சிந்தனையின் பலனாக இருக்கின்றது. 

இந்த நேர்மறையான சிந்தனையே புது வாய்ப்புகளில் உள்ள சாதகமான வழிகளைக் கண்டறிந்து ஒவ்வொரு சூழ்நிலையையும் நேர்மறையாக அணுகும் துணிவைத் தருகிறது. 

கனவு மெய்ப்பட வேண்டும்: 

The lighting board shows that, Dream big, Work hard, Never give up
The lighting board shows the commands that should be in mind

மிகப்பெரிய மனிதர்கள் என்று நாம் கொண்டாடுபவர்களின் சாதனைகளைச் சுருக்கமாக ஓரிரு வரிகளில்கூட கூறிவிடலாம்.   ஆனால், அந்தச் சாதனைகளைச் செய்வதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும், சந்தித்த எதிர்ப்புகளும், அவர்களுடைய விடாமுயற்சியின் பலன்களாக, கடின உழைப்பின் விளைவுகளாக விரிந்து, பலநூறு பக்கங்கள் கொண்ட சரித்திரத்தின் சாதனை புத்தகங்களாக உருவாகின்றன. 

“சிறந்த குறிக்கோளில் வெற்றிபெற வேண்டும் என்ற கனவு இருக்கலாம்.  ஆனால் குறிக்கோளுக்காக உழைப்பதில் கனவு காணக்கூடாது”.  குறிக்கோளை அடைவதற்குத் தேவையான சரியான திட்டமிடலும், முறையான கடின உழைப்பும்தான் கனவை மெய்ப்படச் செய்யும் முக்கியமான வழிகள் என்று சாதனையாளர்கள் வாழ்ந்து சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.  

அனைவருக்கும் அடிப்படை இலட்சியமாக விளங்கும் கல்வியில் பட்டங்கள் பெறுவதற்கே பல ஆண்டுகள் படித்து உழைத்து, பல சவால்களைச் சந்தித்தப் பின்னரே வெற்றிபெற முடியும் எனும்போது, தனிப்பட்ட வகையில் நாம் நிர்ணயித்துக்கொள்ளும் மிகச் சிறந்த குறிக்கோளின் வெற்றி என்பது அதற்கேற்ற உழைப்பையும், திறமையையும் நம்மிடம் எதிர்பார்க்கும் என்பதும் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மைதானே. 

உழைக்காமல் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த வெற்றியின் மகத்துவத்தை உணராத குழந்தைத் தனமான எண்ணமாகும்.   மந்திரக் கதைகளில் வரும் மாயங்களைப் போல வெற்றிகள் நோகாமல் வருவதில்லை. உயர்ந்த நோக்கத்தில் வெற்றிபெற உழைப்பவர் யாராக இருந்தாலும், அவருடைய வாழ்க்கை வலிகளை வலிமைகளாக மாற்றியவருடைய பயணமாக, சாதனை சரித்திரத்தின் நீண்ட நெடும்பயணமாக இருக்கும் என்பது உண்மையாகும்.

மதிப்புக்கூட்டல்: 

Dimonds in various sizes
The strong diamond improves its value by its types of cuts.

நிலையான உறுதித் தன்மையைக் கொண்ட வைரங்கள் எப்போதும் மதிப்பு மிக்கவைதான்.  அவையே பலகோணங்களில் பட்டை தீட்டப்பட்டு ஒளிவீசி ஜொலிக்கும்போது அவற்றின் மதிப்பு மேலும் கூட்டப்படுகிறது. அத்தகைய உறுதியான வைரம்போல நிலையான பண்புகள் இருப்பவரானாலும், குறிக்கோளின் வெற்றிக்காக, சந்திக்கும் சூழ்நிலைகளால் செதுக்கப்பட்டு, திறமை உள்ளவராக ஜொலிக்கும் வளர்ச்சியே அவரது தனித்தன்மையின் சாதனையாகும். 

வாழ்க்கையில் ஒருவருக்கு இயல்பாக இருக்கும் வாய்ப்புகள் மற்றொருவருக்கு வாழ்நாள் கனவாக இருக்கலாம்.  எனவே, கிடைத்திருக்கும் வாழ்க்கையில் இருக்கும் வாய்ப்புகளுக்கு நன்றி கூறுவதும், எதிர்நோக்கும் நல்ல வாய்ப்புகளுக்கான முழுத்தகுதியை வளர்த்துக்கொள்வதும் மகிழ்ச்சியான வாழ்க்கையில் மேலும் பல உயர்வுகள் கிடைப்பதற்கு ஏற்ற சிறந்த வழியாக இருக்கும். 

 

#   நன்றி. 

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *