The Teddy is holding the notice board that, it's gonna be okay.
Everything will be okay, be hopeful

நம்மை காக்கும் நல்லுணர்வு. Empathy.

உணர்வுகள்: 

மனதில் தேங்கியிருக்கும் உணர்வுகள், மனதிலிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகள் மற்றும் வெளி சூழ்நிலையில் இருக்கும் உணர்வுகள், சூழ்நிலையிலிருந்து வெளிப்படுகின்ற உணர்வுகள் என எல்லா இடங்களிலும் உணர்வுகளின் ஆளுமையைக் காண்கிறோம்.

இவற்றுள், மனதிலிருந்தும், சூழ்நிலையிலிருந்தும் வெளிப்படுகின்ற உணர்வுகள் அவற்றுக்கே உரிய மொழியின் மூலமாகவும், கூடுதல் துணையாக வருகின்ற வார்த்தைகளின் மூலமாகவும் வெளிப்பட்டு, மற்றவர் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் பரிமாற்றத்திற்கு உட்பட்ட நிலையில் இயங்குகின்றன.

நல்ல உணர்வுகள்:

எல்லா நிலைகளிலும் முதன்மையாக வெளிப்பட்டு வலுவான ஆதிக்கத்தைச் செலுத்துகின்ற இத்தகைய உணர்வுகள் நியாயமான நோக்கத்தோடு, நேர்மறையான உணர்வுகளாக வெளிப்படுகின்ற சூழ்நிலைகளில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்றன. 

இவ்வாறு, நேர்மறையாக பரிமாறப்படும் உணர்வுகள், தனி நபருக்கான பலன்களாக மட்டும் அல்லாமல் குடும்பம், உறவுகள், நண்பர்கள், தொழில்சார்ந்த குழுக்கள், சமுதாயம் போன்ற எல்லா நிலைகளிலும் நல்ல விளைவுகளைத் தருகின்றன. 

இத்தகைய சூழ்நிலைகளில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து இயங்கும் இடங்களில் பரிமாறப்படுகின்ற கருத்துகளில் உள்ளடங்கியிருக்கும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் சரியாக உணர்ந்துகொள்ளும் நுட்பமே தொடர்புகளை எளிதாக்கி நல்ல விளைவுகள் ஏற்பட வழிவகுக்கின்றது.

ஒத்துணர்வு (Empathy):

மற்றவர் உணர்வுகளை, கருத்துகளை அவர்களுடைய கோணத்திலிருந்து பார்த்து, புரிந்துகொள்வதற்கு Empathy எனும் ஒத்துணர்வு அவசியமானது.  இது பெரும்பாலும் எல்லா சூழ்நிலைகளுக்கும் தேவையான பொதுவான உணர்வு என்றாலும் சூழ்நிலையின் தன்மையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செயல்படுகின்றது.

அதாவது, ஒருவரிடமிருந்து வெளிப்படுகின்ற அன்பு, நட்பு, காதல், மரியாதை,… போன்ற உணர்வுகள் மற்றவரிடமும் அதே சமமான உணர்வுகளை எதிர்பார்த்து வெளிப்படுகின்றன.  இவை “ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் உணர்வுகளாக” இருவழிப் பாதையில் (give and take) இயங்குகின்றன. 

இத்தகைய உணர்வுகளை மற்றவருடைய நிலையிலிருந்தும் புரிந்துகொண்டு, அதே உணர்வுகளாக பரஸ்பரம் வெளிப்படுத்துகின்ற குடும்பம், உறவுகள், நண்பர்கள் என மனதிற்கு அணுக்கமாக இருக்கும் உறவுநிலைகள் மேலும் உறுதியாக வலுப்படுகின்றன.

இதுவே, வருத்தமான சூழ்நிலையில் உள்ள ஆழமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கு பொருத்தமான மாற்று உணர்வாக ஆறுதலை வெளிப்படுத்தி, நம்பிக்கையும் தைரியமும் தருகின்ற அணுகுமுறைகளோடு வெளிப்படுகின்ற முக்கியமான உணர்வாக இருக்கிறது.  

உதாரணமாக, ஒரு சூழ்நிலையில் ஒருவர் பயம், வருத்தம், வலி போன்ற  உணர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிப்பட்டிருப்பவரின் மனநிலையை உண்மையாக உணர்ந்து, அந்த ஒத்துணர்வின் வெளிப்பாடாக பொருத்தமான “ஆறுதல்” உணர்வை வெளிப்படுத்தி, அந்தப் பாதிப்பிலிருந்து வெளியே வருவதற்கான “நம்பிக்கையைத் தந்து”, அதற்கு “துணையாகச் செயல்படுவது” empathyயின் சிறந்த தன்மையாகும். 

மகிழ்ச்சி:

இந்த ஒத்துணர்வு கடினமான சூழ்நிலைகளுக்கு மட்டுமல்ல அன்றாடம் சந்திக்கும் சூழ்நிலைகள் மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலைகளிலும் வெளிப்படுகின்றது.

குடும்பம், உறவு, நட்பு, சமூகம், தலைமை என பெரும்பாலான இடங்களில் வெளிப்படுகின்ற இந்த உணர்வு, சமூக நலவாதிகளிடம், ஆசிரியர்களிடம் பெருமளவில் வெளிப்படுகிறது எனலாம். 

சமூகத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களின் விருப்பங்களை, தேவைகளை அவர்களது மனநிலையிலிருந்து புரிந்துகொள்ளவும், போட்டிகள், தேர்வுகள் போன்றவற்றில் பங்கு பெருகின்றவர்களின் உழைப்பையும் உணர்வுகளையும் உணர்ந்து, அவர்களின் வெற்றிக்குத் தேவையான ஊக்கத்தைத் தந்து, அவசியமான உதவிகள் செய்யவும் ஒத்துணர்வு அவசியமான உணர்வாக இருக்கிறது.  

அதிலும் குறிப்பாக மாணவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவர்களுடைய மனநிலைக்கு ஏற்றாற்போல நெகிழ்வு தன்மையோடு கையாளுவதிலும், அவர்கள் முன்னேறுவதற்கு தங்களால் செய்யக்கூடிய அனைத்து உதவிகளையும் செய்து உதவுகின்ற தன்மையும் தலைமுறைகளை உயர்த்துகின்ற உயர்ந்த பண்பு எனலாம்.

இவ்வாறு, மற்றவர் உணர்வுகளைத் தன்னுடைய உணர்வுபோலப் புரிந்துகொண்டு செயல்படும் empathy என்ற உணர்வு மனிதனின் உயர்ந்த பண்புக்குச் சான்றாகச் செயல்படும் நல்லுணர்வாகும். 

மேலாண்மை:

உணர்வுகள் வெளிப்படுகின்ற சூழ்நிலையின் தன்மையைப் பொருத்து, அவை ஏற்படுத்துகின்ற தாக்கத்தைக் கையாளும் மனதின் தகுதியைப் பொருத்து விளைவுகள் வெவ்வேறு வகையில் மாறுபடுகின்றன. 

உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றை நுட்பமாகக் கையாளும் Emotional Inteligence எனும் திறன் “உணர்வுகளில் மேலாண்மையை” வளர்க்கிறது. 

அதுபோலவே, சூழ்நிலையில் நிலவும் உணர்வுகளையும், சுற்றியுள்ள மனிதர்களின் உணர்வுகளையும் பக்குவமாகப் புரிந்துகொள்வதும், அவற்றை நேர்த்தியாகக் கையாளுவதும் “சூழ்நிலை மேலாண்மை” எனும் திறனாக வெளிப்பட்டு சுமுகமான விளைவுகளைத் தருகிறது.

மற்றவர் மனநிலையைப் புரிந்துகொண்டு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதே உணர்வுகளைப் பரிமாறிக்கொள்வது அல்லது மாற்று உணர்வுகளின் மூலம் சூழ்நிலையைச் சீராக்குவது என சிறப்பாகச் செயல்படுகின்ற எம்பதிக்கும் சில வரைமுறைகள் உண்டு என்பதை உணர்ந்து கையாளுவது நேர்மறையான பலன்களை வெளிப்படுத்துகிறது.

தன்னுடைய உணர்வுகளையும், அவற்றின் எல்லைகளையும் மதித்து, முறையாகக் கையாளக்கூடிய Self Empathy உள்ளவர்களே, மற்றவர் உணர்வுகளில் தங்களுக்கு உள்ள எல்லைகளை உணர முடியும். 

வலி தீர்க்கும் மருத்துவரின் உண்மையான அக்கறைபோல இதமான பாதுகாப்புத் தந்து, சூழ்நிலைகளை நாகரிகமாகக் கையாள உதவுகின்ற Empathy எல்லா உறவு நிலைகளையும் ஆரோக்கியமாகப் பேணுவதற்கு உதவுகின்ற சிறந்த உணர்வாகும். 

#  நன்றி. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *