சிந்தையும் செயலும்:
ஒரு மாணவர் தெளிவாகப் பாடங்களைப் புரிந்துகொண்டு படித்து மனதளவில் முன்தயாரிப்போடு இருப்பது வெற்றிக்குத் தேவையான அடிப்படை முயற்சியாக இருக்கிறது. ஆனாலும் இது மட்டுமே முழுமையான வெற்றிக்குப் போதுமானது இல்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும்.
எனவே, இந்த அடிப்படை முயற்சிகளோடு சேர்ந்து, அவர் சந்திக்கும் நிகழ்காலத்தின் சூழ்நிலைகளையும், தேர்வுநேரத்தின் சவால்களையும் மனவுறுதியோடு கையாளுகின்ற அவருடைய தனிப்பட்ட அணுகுமுறை(attitude)யும் இணைகின்ற வெளிப்பாடே முழுமையான வெற்றியாகக் கிடைக்கிறது.
அதுபோலவே வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலையையும் நன்கு சிந்தித்துத் திட்டமிடுவதில் தேர்ந்தவராக இருப்பவரும், நடைமுறையில் சந்திக்கும் சூழ்நிலைகளில் செயல்படுகின்ற தனிப்பட்ட அணுகுமுறையே அவருடைய வாழ்க்கையின் பலனாக விளைகிறது.
இலக்கை நோக்கிச் செல்லும் வாழ்க்கை பயணத்தில் சிந்தனை, திட்டமிடல் என்பது ஆரம்பநிலையின் blueprint ஆகத் தெளிவாக இருந்தாலும், அதில் சந்திக்கும் எதிர்பாராதத் திருப்பங்களும், சூழ்நிலை மாற்றங்களும் அந்த நிலையிலேயே உடனடியாகச் சிந்தித்து spontaneous ஆகச் செயல்படக்கூடிய அளவில் வேகமாக நடைபெறுகின்றன.
இந்நிலையில் வெளிப்படுகின்ற உணர்வுகள், உடல்மொழி, பேச்சுகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியாக, சூழ்நிலைகளைக் கையாளுகின்ற தனிப்பட்ட அணுகுமுறை (attitude) சூழ்நிலையின் தன்மையைத் தீர்மானிக்கிறது.
செயல்படுகின்ற சூழ்நிலையின் போக்கைக் கவனித்து, அதன் விளைவைக் கணித்து, வேகமாகச் சிந்தித்துச் சமயோசித்தமாகச் செயல்படுகின்ற திறன் என்பது மனமும் செயலும் இணைந்து செயல்படுகின்ற ஆழமான பயிற்சியில் வளர்கின்ற முதிர்ச்சியான அணுகுமுறை.
எனவே, வாழ்க்கையில், மனிதனின் உயர்வான பண்பும், வளமான மனமும், நிதானமான மனநிலையும் தெளிவான பாதைகளை உருவாக்குகின்றன என்றால் அந்தப் பாதையில் பயணிக்கும் தகுதிவாய்ந்த வாகனமாக இயங்கும் பொறுப்பு அணுகுமுறையில் வெளிப்படுகிறது.
தனித்துவம்:
வாழ்க்கையின் மிகச் சாதாரண விஷயமாக இருந்தாலும், முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அதில் ஏற்படுகின்ற மாற்றங்கள் திருப்பங்கள் ஆகியவை தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன.
இவை, முன்பே கணித்துத் திட்டமிட்டதாகவும் இருக்கலாம் எதிர்பாராததாகவும் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலைகளைக் கையாளுகின்ற அணுகுமுறைகளே அந்தச் சூழ்நிலையின் தன்மையை மாற்றி பயணத்தின் அனுபவங்களாக உருவாகின்றன.
ஒரு காட்சி:
ஒரு அலுவலகத்தில், நேர்காணலுக்கு வந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களிடம் சம அளவுள்ள மூன்று சிறிய குச்சிகளைக் கொடுத்து, அவற்றைப் பயன்படுத்தி square அமைக்க வேண்டும் என்று மேலாளர் கூறுகிறார்.
முதலில் வந்த ஒருவர், மூன்று குச்சிகளை வைத்து முக்கோணம் அமைக்கிறார், square (சதுரம்) அமைக்க முடியவில்லை என்பதால் இதை எப்படிச் செய்வது என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.
இரண்டாவது வந்த நபர் மூன்று குச்சிகளை வைத்து சதுரம் அமைக்கவே முடியாது என்று தீர்க்கமாகக் கூறுகிறார். அதோடு சாத்தியமில்லாத ஒன்றை செய்யச்சொல்லி தன்னை ஏமாற்றுவதாகக் கூறுகிறார்.
மூன்றாவதாக வந்த நபரும் மூன்று குச்சிகளை வைத்து முயற்சி செய்துவிட்டு, geomentrical வடிவமாக square அமைக்கமுடியாது என உணர்ந்ததும், சற்று வேறுவிதமாக மாற்றி யோசித்து, எண் 4 ஐ வடிவமைக்கிறார். மேலும் 4 என்பது 2ன் square (வர்க்கம்) என்ற விளக்கத்தையும் தருகிறார்.
நேர்மறையான மனநிலையோடு மாற்று வழியைச் சிந்தித்து, அதை சமயோசிதமாகச் செயல்படுத்திய இந்த அனுகுமுறையினால் அவர் மேலாளரின் நன்மதிப்பைப் பெறுகிறார்.
ஒரே சூழ்நிலையாக இருந்தாலும் அதை எதிர்கொள்பவரின் மனநிலைக்கு ஏற்ப, அணுகுமுறைக்கு ஏற்ப வெவ்வேறு விளைவுகளைத் தருகிறது எனக் கூறுகின்ற இந்தக் காட்சி, மனமும் அணுகுமுறையும் இணைந்து செயல்படுவதில் உள்ள விகிதாச்சாரமே ஒருவருடைய தனித்தன்மையாக வெளிப்படுகிறது என்றும் கூறுகிறது.
அடிப்படை:
மரம், உலோகம் அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகின்ற அளவுகோல்கள், 0லிருந்து தொடங்கி குறிப்பிட்ட ஒரு எண்ணில் முடிவதாக வடிவமைக்கப்படுகிறது.
அத்தகைய அளவுகோலின் நுனிகளில் அதாவது, 0க்கு முன்பும் கடைசிஎண் முடிந்த பின்பும் குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு அதில் எந்த அளவீடும் இல்லாமல் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு, அளவீடுகளைத் தாங்கி நிற்பதே முதன்மையான பயனாக உள்ள அளவுகோலின் முனைகளில் எந்த அளவீடுகளும் இல்லாமல் விடப்படுகின்ற இடம், பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதாகவும், முனைகளில் குறிக்கப்பட்டிருக்கும் அளவுகளைப் பாதுகாக்கும் வகையிலும் இருப்பதோடு, அந்த அளவுகோல் பயன்படுகின்ற காலத்தைக் கூடுதலாக நீட்டிக்கவும் உதவி செய்கின்றன.
அதுபோல, மனித வாழ்க்கையை உருவாக்குவதற்கு அடிப்படையாக இயங்கும் சுயஒழுக்கம், நடைமுறை வாழ்க்கையின் நோக்கமாக உள்ள குறிக்கோள், முன்னேற்றம், வெற்றி ஆகியவற்றின் முயற்சிகளைத் தாங்கி நின்று, அதன் பயன்களுக்குப் பாதுகாப்பு அளித்து, அதற்கும் அப்பாற்பட்ட நிலையில் தனிப்பட்ட மனஅமைதிக்கும் துணையாக நீடித்து வந்து உதவுகின்றது.
வெகுசாதாரணமாகத் தெரியக்கூடிய அல்லது வெகுவாகக் கவனிக்கப்படாத தனிமனித ஒழுக்கம் என்பது மனதில், சிந்தனையில் தொடங்கி தொடர்கின்ற முயற்சிகளே, பாராட்டுதலுக்குரிய சிறந்த செயல்பாடுகளைத் தொய்வின்றி செயல்படுத்தும் அணுகுமுறைகளாக வெளிப்படுகின்றன.
முதலீடுகள்:
கடந்தகாலத்தின் முதலீடுகளாகச் செயல்பட்ட அணுகுமுறைகளின் பலன் இன்றைய கையிருப்பாக ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கிறது. இன்றைய நிகழ்காலத்தைக் கையாளுவதற்கான வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்துகின்ற சரியான அணுகுமுறைகளே, எதிர்காலத்தின் விளைவுகளை இலாபகரமாகப் பெறுவதற்கான முதலீடுகளாக இயங்குகின்றன.
குடும்பம், உறவு, நட்பு, கல்வி, அறிவு, குறிக்கோள், திறன்கள், பொருளாதாரம், ஆரோக்கியம் என வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் முதலீடு செய்யப்படுகின்ற அணுகுமுறைகள், ஒவ்வொரு நாளும் வளர்கின்ற சிறிய மாற்றங்கள் மனமுதிர்ச்சியாகப் பெருகி, தனித்துவமான வாழ்க்கை அனுபவத்தின் மிகப்பெரிய மதிப்புமிக்கப் பலனாக முழுவடிவம் பெறுகின்றது.
# நன்றி.
