பஞ்சதந்திரங்கள். PanchaThanthiras.Stories.
கதைகள் கூறும் அறிவு:
குழந்தைப் பருவம் முதல் பலவகையான கதைகள் படித்திருக்கிறோம். அவற்றுள் விலங்குகள் பறவைகள் எல்லாம் முக்கிய பாத்திரங்களாக இடம்பெற்று, அவைகள் பேசுகின்ற வகையில் (நவீன கார்ட்டூன்களுக்கு முன்மாதிரிகளாக) எழுதப்பட்ட பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகள் விரும்பிப் படிப்பதற்கேற்ற வகையில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
இவ்வாறு, குழந்தைப் பருவத்தின் பொழுதுகளை உற்சாகம் ஆக்குகின்ற இந்தக் கதைகள், விலங்குகள் பறவைகள் பற்றியவை மட்டும் அல்ல மனிதர்களிடத்திலும் அத்தகைய தன்மைகள் இருக்கலாம் என்று கூறுகின்றன.
இவை, அக்காலத்தின் இளவரசர்களுக்கு விஷ்ணுசர்மாவால் கூறப்பட்ட கதைகள் என்றாலும், இன்றைய நடைமுறையில் பலவிதமான உணர்வுகளைச் சந்திக்கும் பெரியவர்களும் அதே சூழ்நிலைகளைச் சந்திக்கும் குழந்தைகளும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய பல கதைகளுள் இவையும் ஒருவகை.
உயர்ந்த நோக்கங்களோடு, மேன்மையான சிந்தனைகளால் செழித்துப் பசுமையாக வளர்ந்திருக்கும் இந்த உலகத்தில், தவிர்க்க முடியாத களைகளாக வளர்ந்துள்ள பொறாமை, சுயநலம், சூழ்ச்சி போன்ற எதிர்மறை பாதிப்புகளை அடையாளம் கண்டு விலகுவதற்கும், விலக்குவதற்கும், துணிந்து புத்தி சாதுர்யத்தோடு எதிர்கொள்வதற்கும் தேவையான சிந்தனைகளைத் தூண்டுகின்ற எளிமையான கதைகள்.
நேர்மறையான மனநிலையோடு சூழ்நிலைகளை இயல்பாக அணுகும் நிலையிலும், எதிர்பாராமல் தாக்கும் எதிர்மறைகளை இனம்கண்டு, எச்சரிக்கையோடு கையாளுகின்ற புத்திசாலித்தனமே நல்லவர்கள் தொடர்ந்து நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வாழ்வதற்கு ஏற்ற வழியாக இருக்கிறது.
1. மித்ர பேதம்:
பொறாமை மற்றும் சுயநலத்திற்காக, உண்மையாகப் பழகுபவர்களை, உறவுகளை, நண்பர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியும் உலகத்தில் உள்ளது என எச்சரிக்கும் கதை.
காட்டில் இருக்கும் சிங்கமும் அதை சந்தித்தக் காளையும் தொடர்ந்து நட்பாகப் பழகுவதைப் பார்த்த இரண்டு நரிகள் பொறாமைகொண்டன. சிங்கத்தின் புதிய நட்பால் தங்களது முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்று எண்ணி அந்த நட்பைக் கெடுக்க நினைத்தன.
அதனால், சிங்கத்தைப் பற்றி காளையிடமும், காளையைப் பற்றி சிங்கத்திடமும் பொய்யான தகவல்களைக் கூறி இருவருக்குமிடையே பகைமையை ஏற்படுத்தி, தங்கள் பொறாமைக்குத் தீனிபோட்டுக்கொண்ட நரிகள், இறுதியில் காளையைத் தங்கள் வயிற்றுக்குத் தீனியாக்கிக்கொண்டன.
தவறான நோக்கத்துடன், எதிர்மறையான விளைவுகளை எதிர்பார்த்துப் புறம்பேசும் நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நீதியைக் கூறுகின்ற கதை.
2.மித்ர லாபம்:
நல்ல நண்பர்களைப் பெறுவது வாழ்க்கையின் பலம் என்று நெறிப்படுத்துகின்ற கதை.
காட்டில் வாழும் காகம், எலி, மான் மற்றும் ஆமை ஆகிய நான்கும் நல்ல நண்பர்களாக இருக்கின்றன. ஒருநாள் வேடன் விரித்த வலையில் மான் மாட்டிக்கொண்டது. இதைப் பார்த்த காகம் நண்பன் எலியையும் அழைத்துவந்து, வலையில் சிக்கியிருந்த மானைக் காப்பாற்றியது.
அந்த நேரத்தில் எலியைப் பின்தொடர்ந்து வந்த நண்பன் ஆமையைக் குறி பார்த்த வேடனை மான் கவனித்தது. உடனே அது மயங்கி விழுவது போல நடித்து, வேடனின் கவனத்தைத் திசைதிருப்பி ஆமையைக் காப்பாற்றியது.
நல்ல நண்பர்கள் ஒற்றுமையாக இருப்பது வாழ்க்கையில் மிகப்பெரிய பலம் என்ற நீதியைக் கூறுகின்ற கதை.
3. காகோலுகீயம்:
பகைமை எண்ணம் உள்ளவர்களின் நயமான வஞ்சக வார்த்தைகளை ஒருபோதும் நம்பக்கூடாது என உணர்த்துகின்ற கதை.
ஒரு காட்டில் காக்கை இனமும் ஆந்தை இனமும் பலகாலமாகத் தொடர்ந்து பகை உணர்வுடன் இருந்தன. அப்போது அந்தப் பகையைச் சூழ்ச்சியால் வெல்ல நினைத்த காகம் ஒன்று ஆந்தை இனத்திடம் சென்றது.
தான் ஆந்தை இனத்திற்கு ஆதரவாகப் பேசியதால், விரட்டியடிக்கப்பட்டுத் தனிமை ஆக்கப்பட்டதாகக் கூறி, தன்னைப் பரிதாபமாக வெளிப்படுத்திக்கொண்டது.
சிறிது காலத்தில் ஆந்தைகளிடம் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தி, அவை ஏமாந்த வேளையில் தன் இனத்தின் பகையை மொத்தமாகத் தீர்த்துகொண்டது.
எப்போதும் பகை உணர்வோடு இருப்பவர்கள் திடீரென்று சாதுர்யமாகப் பேசும் வஞ்சக வார்த்தைகளை நம்புவது பாதுகாப்பு அல்ல என்ற கருத்தைக் கூறுகின்ற கதை.
4.லப்த பிரணாசம்:
பேராசை, நல்ல நட்பை இழப்பதற்கு காரணமாக இருக்கும் என்று விளக்குகின்ற கதை.
ஒரு நதிக்கரையில் உள்ள நாவல் மரத்தின் பழங்களை உண்டு மகிழும் ஒரு குரங்கு, அந்த நதியில் அடிக்கடி வருகின்ற முதலைக்கும் அந்தச் சுவையான நாவல் பழங்களைக் கொடுத்து நண்பனாகப் பழகி வந்தது.
தினமும் நாவல் பழத்தின் சுவையில் திளைத்த முதலை, தன்னுடைய மகிழ்ச்சியை தன்னுடைய மனைவிடம் கூறியது. அதற்கு, “நாவல் பழமே இவ்வளவு சுவை என்றால் அதை தினமும் உண்டு வாழும் குரங்கின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும்!”, என்று முதலையின் மனைவி கூறியது.
அதன் பின்னர் ஒருநாள், முதலை தன் வீட்டில் ஏற்பாடு செய்திருக்கும் விருந்திற்கு குரங்கை அழைத்தது. அதற்கு சம்மதித்த குரங்கை முதலை தன் முதுகில் ஏற்றி சென்றது.
நதியின் ஆழமான பகுதி வந்ததும் முதலை குரங்கைப் பார்த்து, விருந்து குரங்குக்கு அல்ல குரங்கை உண்ணப்போகும் தன்னுடைய மனைவிக்குத்தான் என்று கூறியது.
நண்பனாக நினைத்திருந்த முதலையின் வார்த்தைகளால் குரங்கு அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டாமல், “அட முதலையே இதை நீ முன்பே கூறியிருந்தால் மரத்தில் வைத்திருக்கும் என்னுடைய ஈரலை எடுத்து வந்திருப்பேனே”, என்று குரங்கு கூறியது.
இதைக்கேட்ட முதலை, “அப்படியா ஈரலை மரத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாயா, சரி வா இப்போது போய் எடுத்துவரலாம்”, என்று கூறியபடி, திரும்பவும் மரத்தை நோக்கி முதலை வேகமாகச் சென்றதும், உடனே குரங்கு மரத்தில் தாவி ஏறிக்கொண்டது.
பின்னர், “முட்டாள் முதலையே! தினமும் உனக்கு அன்போடு நாவல் பழங்களைக் கொடுத்த என்னுடைய நட்பை உன்னுடைய பேராசையால் இழந்து, நட்புக்குத் துரோகம் செய்து விட்டாயே!”, என்று கூறியது.
துரோகத்திற்கு அடிப்படையான பேராசை உள்ள உறவு ஆபத்தானது என்று உணர்த்துகின்ற கதை.
5.அபரீஷித காரகம்:
ஆராயாமல், பதட்டத்தில் செயல்படுவதன் விளைவு.
கீரியை வீட்டில் பராமரித்து வளர்க்கும் ஒரு பெண், தன்னுடைய குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, குடத்தில் தண்ணீர் எடுப்பதற்காக வெளியே சென்றாள். அப்போது அந்தக் குழந்தையின் அருகில் பாம்பு செல்வதைக் கண்ட கீரி, பாம்புடன் சண்டைப்போட்டுக் கடித்துக் கொன்றது.
சிறிது நேரத்தில் தண்ணீர் குடத்தோடு உள்ளே வந்த பெண், எதிரில் வந்த கீரியின் வாயில் இரத்தம் இருப்பதைப் பார்த்ததும், குழந்தையைக் கீரி கடித்துவிட்டதாகத் தவறாக நினைத்து பதறியபடி தண்ணீர் குடத்தை கீரியின் மீது போட்டுவிட்டு குழந்தையைப் பார்க்க ஓடினாள்.
குழந்தை நன்றாக இருப்பதையும் அதன் அருகில் பாம்பு கடிபட்டு கிடப்பதையும் பார்த்து, நடந்ததைப் புரிந்துகொண்ட அவள் தன் குழந்தையைக் காப்பற்றிய கீரியின் அருமையைத் தெரிந்துகொண்டாள். ஆனால் அவள் பதட்டத்தில் சிறிதும் சிந்திக்காமல் செயல்பட்டதன் விளைவால் ஏற்பட்ட கீரியின் முடிவைக் கண்டு வருந்தினாள்.
திடீரென்று மனத்தைத் தாக்குகின்ற எண்ணங்கள் சிந்தனைக்கு வழிவிடாமல், பதட்டத்தை ஏற்படுத்துவதோடு தவறான விளைவுகளுக்கும் காரணமாகும் என்று எச்சரிக்கை செய்யும் கதை.
உணர்ச்சி வசப்பட்ட நிலையில், வேகமாகச் செயல்படுவது சரியல்ல என்ற கருத்தைக் கூறுகின்ற கதை, சூழ்நிலையைக் கவனித்து ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்று உணர்த்துகிறது.
பயன்கள்:
இத்தகைய கதைகளைப் படித்துப் புரிந்துகொள்வதால் என்ன பயன்?
அறிவும் ஒழுக்கமும் இணைந்த வாழ்க்கையே முழுமையான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்க்கைக்குத் தேவையான நேர்மை, நிதானம், கருணை, புத்திசாலித்தனம் மற்றும் எச்சரிக்கை ஆகியவை பற்றி கூறுகின்ற கதைகள் வாழ்க்கைக்கு அவசியமான பாடங்களாகும்.
இவை, குழந்தைகளின் சிந்தனைகளைச் சீராக்குவதோடு மாறுபடுகின்ற சூழ்நிலைகளுக்கேற்ற வகையில் தேவையான மாற்றுச் சிந்தனைகளைத் தூண்டுவதால் நேர்மறையான நல்ல முடிவெடுக்கும் தன்மையை வளர்க்கின்றன.
உலகம் பயன்பெறும் வகையில் அறிஞர்களாக இருந்து, சாதனையாளர்களாக உயர்ந்து, அறிவின் பயனை முழுமையாக பெறுபவர்கள் மேல்நிலை அறிவாளிகள். அதே அறிவைப் பயன்படுத்தி தங்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்பவர்கள் அடுத்த நிலையாளர்கள்.
அதுபோல, அறிவார்ந்த ஒழுக்கங்களை, நீதிநெறிகளை தமக்குள் முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை சிறப்பாக நேர்மையாக நடைமுறைப்படுத்தும் பண்பாளர்களே மேன்மக்கள். அதற்கான முயற்சியின் படிநிலைகளில் இருப்பவர்கள் அடுத்த நிலையாளர்கள்.
இத்தகைய படிநிலைகளில் தொடர்ந்து முன்னேறுவதற்கு உள்ள பல வகையான வாய்ப்புகளுள் சிந்தனையைத் தூண்டுகின்ற கதைகளைப் புரிந்துகொள்வதும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது.
பள்ளிகளில் நீதிநெறி (Moral Instruction) வகுப்பு என்ற மிகவும் உற்சாகமான வகுப்பு இருந்த பொற்காலத்தில், கதை சொல்வதோடு சேர்த்து அதைப்பற்றி மேலும் விவாதிக்கும் அருமையான ஆசிரியர்களால் பலவிதமான கதைகளின் சுவையும் அவற்றில் உள்ள நல்ல கருத்துகளும் நன்கு அறிமுகம் ஆனது.
இத்தகைய கதை புத்தகங்களில் உள்ள கதாபாத்திரங்கள், பேசுகின்ற வார்த்தைகள் கொக்கி அமைப்புள்ள வட்டத்தினுள் இருப்பது போலவும், நினைத்துப் பார்க்கும் வார்த்தைகள் ஒன்றன்மீது ஒன்றாக இருக்கும் சிறிய வட்டங்களால் குறிக்கப்படுவதும் என, ‘பேச்சுக்கும் சிந்தனைக்கும் வரைபடத்தில் வேறுபடுத்தி காட்டிய நுட்பம்’ அப்போது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கதைகள் நேரடியான செய்திகளாக மட்டும் அல்லாமல் படிப்பவரின் திறனுக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்பட்டு, பலவிதமான உட்கருத்துகளை ஆராய்ந்து கண்டறியும் வசதியோடு சிந்தனைக்குரிய பல வாய்ப்புகளைத் தரக்கூடியது.
மேலும், இத்தகைய கதைகளில் கூறப்பட்டுள்ள மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய அனைத்தும் அடையாளங்கள் மட்டுமே. இவை நடைமுறையில் சந்திக்கும் சூழ்நிலைகளின் தன்மையையும், அவற்றின் நோக்கம் மற்றும் விளைவுகளையும் நுட்பமாக உணர்வதற்கு உதவுகின்ற மாதிரிகள் மட்டுமே.
தந்திரங்களுக்குப் பஞ்சமே இல்லாத இக்காலச்சூழலில், சந்திக்கும் சூழ்நிலைகளின் போக்கை உணர்ந்து துணிவோடு எதிர்கொள்ளும் நிலையில், அவற்றை நேர்மறையாகக் கையாளுகின்ற அணுகுமுறையே இன்றைய நடைமுறைக்குத் தேவையான சமயோசித அறிவாக உள்ளது.
மேலும், நீதிநெறி கதைகள், தெனாலி ராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், முல்லா கதைகள் போன்ற நல்ல கதைகளையும், அவற்றில் கூறப்படுகின்ற நுட்பமான அணுகுமுறைகளையும் நினைவில் கொள்வது அனைவருக்கும் புத்துணர்ச்சியைத் தரும் என்று நினைக்கிறேன்.
# நன்றி.